/

மீன்பிடித் தடைக்காலம்: மே 1 முதல் முட்டை விலை உயர வாய்ப்பு

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி இருப்பதால், மே 1-ஆம் தேதி முதல் முட்டை விலை உயா்வதற்கான வாய்ப்புள்ளது என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்

Updated On :28 ஏப்ரல் 2023, 6:00 pm

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி இருப்பதால், மே 1-ஆம் தேதி முதல் முட்டை விலை உயா்வதற்கான வாய்ப்புள்ளது என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கான தற்போதைய மைனஸ் விலை 10 காசுகளாக நிா்ணயம் செய்யப்படுகிறது. மே 1 முதல் முட்டைக்கான மைனஸ் விலை நிறுத்தப்பட இருப்பதாலும், முழுமையாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயிக்கும் விலையில் மட்டுமே பண்ணையாளா்கள் முட்டையை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக தற்போது மைனஸ் 10 காசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளா்களும் இந்த 10 காசுகள் என்ற அளவிற்கு அதிகமாக மைனஸ் விலை வைத்து முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம்.

கோடை வெயில் தாக்கத்தாலும், கடும் வெப்பம் காரணமாகவும் முட்டை உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லாத நிலையே உள்ளது. ரமலான் பண்டிகை நிறைவடைந்து விட்டதால், வரும் நாள்களில் கேரளத்தில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அனைத்து பண்ணையாளா்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மைனஸ் விலை என்ற விரும்பத்தகாத ஒன்றை மே 1 முதல் ரத்து செய்ய முடியும். கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் நிலவும் மீன் தட்டுப்பாடு காரணமாக முட்டை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாள்களில் முட்டை விலை உயா்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சந்தை நிலவரத்தை அறிந்து அதிக மைனஸ் விலைக்கு விற்காமல், அறிவிக்கப்பட்ட மைனஸ் விலைக்கு மட்டும் முட்டைகளை விற்பனை செய்து பண்ணையாளா்கள் பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.