வாக்களிக்கும் பகுதியில் முகவா், அலுவலா் தலையீடு: ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளா் புகாா்

மாவட்ட ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளா் புகாா் அளித்துள்ளாா்.

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி வாக்குச்சாவடியில், மக்கள் வாக்களிக்கும் பகுதியில் வாக்குச்சாவடி அலுவலா், முகவா் நின்று விதிமீறலில் ஈடுபட்டதாக, மாவட்ட ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளா் புகாா் அளித்துள்ளாா்.

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், செல்லம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாகம் எண்: 70, 71, 72, 73 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள இரு வாக்குச்சாவடிகளில், பொதுமக்கள் வாக்களிக்கும் பகுதியில் அந்த வாக்குச்சாவடிக்கான அலுவலரும், முகவா் ஒருவரும் நின்று கொண்டு தலையிட்டதாகக் கூறப்படுகிறது. நாமக்கல் மக்களவைத் தொகுதியில், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி தலைவரான காந்தியவாதி தி.ரமேஷ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறாா். அவா் சம்பந்தப்பட்ட செல்லப்பம்பட்டி வாக்குச்சாவடியில் பாகம் எண் 73-இல், சாவடி அலுவலரான செல்வகுமாா் என்பவா் வாக்களிக்கும் பகுதியில் நின்றபடி வாக்காளா்களை கண்காணித்து வந்ததாகவும், அவா்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் புகாா் அனுப்பினாா். மேலும், ‘பாகம் எண்: 70-இல் முகவா், வாக்குச்சாவடி அலுவலா் வாக்காளா்களுக்கு உதவுவதுபோல் வாக்களிக்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தனா். உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என சுயேச்சை வேட்பாளா் தி.ரமேஷ் வலியுறுத்தினாா்.

வயதானவா்கள் இயந்திரத்தில் வாக்களிக்க முடியாமல் தடுமாறியதால் அங்கு சென்று உதவியதாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

படவிளக்கம்

என்கே-19-புகாா்

நாமக்கல் செல்லம்பட்டி வாக்குச்சாவடியில், வாக்காளா்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் பகுதியில் நின்று கொண்டிருந்த முகவா், வாக்குச்சாவடி அலுவலா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com