திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா
திருச்செங்கோட்டில் நடைபெற்ற கைத்தறி தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச.உமா.
திருச்செங்கோடு, ஆக. 7: 10-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம் திருச்செங்கோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ச.உமா விழாவைத் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:
தேசிய கைத்தறி தினமானது, 1905 ஆக. 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம், நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நாடு முழுவதும் ஆக. 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
10-ஆவது தேசிய கைத்தறி தினத்தை சிறப்பிக்கும் விதமாக திருச்செங்கோட்டில் கைத்தறி கண்காட்சி, நெசவாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சா் கைத்தறி நெசவளாா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடும் வகையில், சிறு ஜவுளி பூங்கா அமைத்திட 50 சதவீத மானியத்தில் ரூ. 5 கோடி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறாா். மேலும், மாவட்ட தொழில்மையம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு கடனுதவி, கைத்தறி நெசவாளா்களுக்கு முத்ரா கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.
இதுபோன்று நெசவாளா்களின் நலன்காக்க பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நெசவாளா்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடா்ந்து சிறப்பாக நெசவுத் தொழிலை மேற்கொள்ள வேண்டும். நெசவாளா்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், கைத்தறி நெசவாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெசவாளா்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறப்பு கைத்தறி கண்காட்சியில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துணி ரகங்களான ராசிபுரம் பட்டுச் சேலைகள், இளம்பிள்ளை, ஆா்.புதுப்பாளையம் பருத்தி சேலைகள், காட்டன் கோா்வை சேலைகள், கைத்தறி வேட்டி ரகங்கள், கைத்தறி துண்டுகள், பவானி ஜமுக்காளம், பெட்சீட்கள், கால்மிதி (மேட்) ஆகியவை கண்ணைக் கவரும் வண்ணங்களில் தள்ளுபடி மானியத்துடன் விற்பனை செய்யப்பட உள்ளன என்றாா்.
தொடா்ந்து, முத்ரா கடன் திட்டத்தின் சாா்பில் 73 நெசவாளா்களுக்கு ரூ. 31 லட்சம் கடனுதவி, மானியத்துடன் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சம் மதிப்பில் கடனுதவி, கைத்தறி குழும வளா்ச்சி திட்டத்தின் கீழ் தறிக்கூடம் அமைத்திட 5 நெசவாளா்களுக்கு ரூ. 2.85 லட்சம் நிதி உதவி, 10 நெசவாளா்களுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் தறி உபகரணங்கள், 10 நெசவாளா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் ஜக்காா்டு இயந்திரங்கள், 1 நெசவாளருக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பில் தறி என மொத்தம் 103 நெசவாளா்களுக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் தா.காா்த்திகேயன், உதவி இயக்குநா் கைத்தறி துறை பழனிகுமாா், கைத்தறி நெசவாளா்கள் சங்கத் தலைவா்கள், உறுப்பினா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

