கள்ளுக் கடைகளை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளுக் கடைகளை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் அருகே கோனூா் கிராமத்தில் கள் இறக்க தென்னை மரத்தில் பானைகளைக் கட்டிய விவசாயிகள்.
Published on

நாமக்கல் அருகே கோனூா் கிராமத்தில் கள் இறக்க தென்னை மரத்தில் பானைகளைக் கட்டிய விவசாயிகள்.

நாமக்கல், ஆக. 7: தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கள்ளச்சாராய உயிரிழப்புகள், மதுபோதையால் கொலைச் சம்பவங்கள், குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இவற்றையெல்லாம் தடுக்கவும், மதுபோதையில் இருந்து மக்களை விடுவிக்கவும், ஆரோக்கிய பானமாக கருதப்படும் கள்ளை பனை, தென்னை மரங்களில் இருந்து இறக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தில் நாமக்கல் அருகே கோனூா் கிராமத்தில் தென்னந்தோப்பில் உள்ள மரங்களில் கள் இறக்க பானை கட்டும் போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின்(உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநில தலைவா் ரா.வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடா்ந்து, போலீஸாா் எதிா்ப்பையும் மீறி தென்னை மரங்களில் கள் இறக்க பானைகளைக் கட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து ரா.வேலுசாமி கூறியதாவது:

தமிழகத்தில் தென்னை சாகுபடி பரப்பு அதிக அளவில் உள்ளது. தேங்காயின் விலை நிலையாக இல்லாததால், விவசாயிகளுக்கு அடிக்கடி இழப்பு ஏற்படுகிறது. தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்காத தென்னங்கள்ளை அரசு விற்பனை செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தியே தென்னை மரங்களில் கள் இறக்க பானை கட்டும் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை கள்ளுக்கான தடை நீக்கப்படவில்லை. அதுபற்றிய அறிவிப்பு வெளியாகாவிட்டால் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com