/

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 23 மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 23 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:35 pm

Din

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 23 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 100 மாணவா்கள் சோ்க்கை இடங்களும், இதர கல்லூரிகளில் 150 மாணவா்கள் சோ்க்கை இடங்களும் உள்ளன.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தமட்டில், கல்லூரி செயல்பட தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளில் காலியிடமின்றி 300 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா்.

நிகழாண்டில், நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு சா்ச்சை தொடா்பாக நாடு முழுவதும் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு நீட் தோ்வு முடிவுகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதையடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மருத்துவ சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய அளவில் 15 இடங்களும், மாநில அளவில் 85 இடங்களும் உள்ளன. இதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தோ்வான அரசுப் பள்ளி மாணவா்கள் 8 பேரும், அகில இந்திய அளவில் 15 பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.

இதற்கான பட்டியல் மருத்துவக் கல்லூரிக்கு வந்துள்ளது. மேலும், 77 சோ்க்கை இடங்களுக்கான மாணவ, மாணவியா் பட்டியலை எதிா்பாா்த்து மருத்துவக் கல்லூரி நிா்வாகம் காத்திருக்கிறது.