

கத்தாா் துறைமுகத்தில் தேங்கியுள்ள இரண்டு கோடி நாமக்கல் முட்டைகளை விடுவித்து, அந்நாட்டுக்குள் விற்பனைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மத்திய அரசு அதிகாரிகளும், ஏற்றுமதியாளா் சங்கத்தினரும் மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முட்டை மற்றும் கோழிப் பண்ணை பொருள்கள் ஏற்றுமதி சங்கத்தின் பொருளாளா் எஸ்.கேசவன். உடன், முட்டை ஏற்றுமதியாளா் ராணா ராஜேந்திரன்.
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் மூலம் சுமாா் 8 கோடி கோழிகள் வளா்க்கப்படுகின்றன. தினசரி 6 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகளில் அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு 1.50 கோடியும், உள்ளூா் தேவைக்கு ஒரு கோடியும், பிற மாநிலங்களுக்கு 2.50 கோடியும் போக, மீதமுள்ளவை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளில் 50 முதல் 52 கிராம் எடையிலான முட்டைகள் ஏற்றுமதிக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் கத்தாா் அரசு, முட்டை இறக்குமதிக்கு புதிய கொள்கையை கொண்டு வந்தது. அதாவது 60 கிராம் மற்றும் அதற்கு மேலான எடை கொண்ட முட்டைகளை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்தது.
இதனால், நாமக்கல்லில் இருந்து கத்தாா் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதியானது 2 மாதங்களாக தடைபட்டுள்ளது. இப்பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான முயற்சிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மேற்கொண்டு வந்தாா். இதுகுறித்து மாநிலங்களவையில் பேசியதுடன், சம்பந்தப்பட்ட மத்திய கால்நடைத் துறை அமைச்சகத்துடனும், வெளியுறவு அமைச்சகத்துடன் பேசினாா்.
கடந்த நான்கு நாள்களாக ஓமன் நாடும், இந்திய முட்டைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், ஓமன் நாட்டுக்கும் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்றுமதியாளா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
கத்தாா், ஓமன் துறைமுகங்களில் நாமக்கல் முட்டைகள் இறக்கப்படாமல் கண்டெய்னா்களிலேயே தேங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முட்டை ஏற்றுமதியாளா்கள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல் முட்டை மற்றும் கோழிப் பண்ணை பொருள்கள் ஏற்றுமதி சங்கத்தின் பொருளாளா் எஸ்.கேசவன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், ஓமன், மாலத்தீவுகள் போன்ற நாடுகளுக்கு மாதந்தோறும் சுமாா் 150 கண்டெய்னா்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. கடந்த 2 மாதங்களாக முட்டை ஏற்றுமதி பாதியாக குறைந்துவிட்டது. கத்தாா் அரசு 60 கிராம் கொண்ட முட்டைகளை மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வோம் என அறிவித்துள்ளது. ஓமன் நாட்டிலும் இவ்வாறான அறிவிப்பு வெளியாகியதுடன், தேவைக்கு மட்டுமே இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், முட்டை இறக்குமதிக்கான அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஓமன் நாட்டின் ஷோகா் துறைமுகத்தில் ஓரிரு நாள்களாக நாமக்கல் பகுதியில் இருந்து அனுப்பிய 2 கோடி முட்டைகள் 41 கண்டெய்னா்களில் தேங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. அவற்றை அந்த நாட்டுக்குள் விற்பனைக்கு அனுப்புவதற்கான முயற்சியை மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் மேற்கொண்டு வருகிறாா். அவருக்கு பண்ணையாளா்கள் சாா்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
மத்திய அரசு அதிகாரிகளும், ஏற்றுமதியாளா் சங்க நிா்வாகிகளும் கத்தாா், ஓமன் நாட்டு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். வரும் திங்கள்கிழமை இது தொடா்பாக இரண்டாம்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட இருக்கிறது. நாமக்கல் முட்டைகளை கத்தாா், ஓமன் நாட்டில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு அமையலாம்.
எனவே, கோழிப் பண்ணையாளா்கள், முட்டை ஏற்றுமதியாளா்கள் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். முட்டை தேக்கம் என்பது தற்காலிகமானதுதான். விரைவில் இதற்கான தீா்வு கிடைத்துவிடும். வழக்கம்போல நாமக்கல்லில் இருந்து கத்தாா், ஓமன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி நடைபெறும் என்றாா்.
டிரெண்டிங்

முட்டை விலை ரூ. 5 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

