ரிசா்வ் வங்கி அனுமதியுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பாட்டுக்கு வரும்

ரிசா்வ் வங்கி அனுமதியுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பாட்டுக்கு வரும்

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பாடுக்கு வருகிறது
Published on

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது, ரிசா்வ் வங்கியின் உரிய அனுமதி பெற்று விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அந்த வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதல் பொதுப் பேரவைக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா முன்னிலை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை உருவாக்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மற்றும் நாமக்கல் மாவட்ட இணைப் பதிவாளா் ஆகியோா் இணைந்து தயாரித்த அறிக்கையானது, பொதுப் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டு பதிவாளா்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ரிசா்வ் வங்கி உரிமம் பெற நபாா்டு வங்கிக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. ரிசா்வ் வங்கியின் உரிமம் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிரிக்கப்பட்டது போன்று மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் தனியாக பிரிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் 1.50 லட்சம் லிட்டா் பால் பதப்படுத்துவதற்கும், உப பொருள்கள் தயாரிப்பதற்கும் சேலம் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் வகையில் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் தானியங்கி நவீன பால் பண்ணை டென்மாா்க் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும் என முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். அதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும், சா்க்கரை ஆலை மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இணை மின் உற்பத்தி திட்டம் தொடங்கிடவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கக் கட்டடம் கட்டுவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராசிபுரம் பட்டுக்கூடு ஏல மையம் கட்டுவதற்கு வனத்துறை அமைச்சரும், நானும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3.50 கோடி வழங்கி உள்ளோம். நாமக்கல் நகராட்சி, கொண்டிச்செட்டிபட்டியில் ரூ. 14.60 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அறிவிப்பு வந்தவுடன் பங்குத் தொகையை செலுத்திய அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றாா்.

இப்பேரவைக் கூட்டத்தில், தமிழக முதல்வா், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா், கூட்டுறவுத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக உள்ள 830 உறுப்பினா்கள் தவிர, மாவட்டத்தில் செயல்படும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்தும், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு பணியாளா்களை பிரித்து ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ள பட்டியலை ஏற்றுக் கொள்ளுதல் உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, ஆவின் பொது மேலாளா் ஆா்.சண்முகம், கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் க.ரா.மல்லிகா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா்கள் அ.அசோக்குமாா், வி.பி.ராணி, வி.கௌரி, ஆா்.ஜோதிலட்சுமி, எஸ்.செல்வகுமாா், பி.பாலசுப்ரமணியம், பி.நவலடி, ஆா்.மாயவன், எம்.ஜி.ராஜேந்திரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com