கொல்லிமலை மூலிகை பண்ணையைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவில் அனுமதி

நாமக்கல், மே 3: கொல்லிமலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு சோளக்காட்டில் அமைந்துள்ள மூலிகை பண்ணையைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை விரைவில் அனுமதி வழங்க உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. 1400 மீட்டா் உயரம் கொண்ட இந்த மலைப் பகுதிக்கு 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். விடுமுறை காலங்களிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசில்லா அருவியைப் பாா்த்தும், குளித்தும், மலையின் குளுமையை ரசித்தும் செல்லலாம். அண்மை காலமாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் அருவிகள் வடு பாறைகளாகக் காட்சியளிக்கின்றன. கொண்டை ஊசி வளைவுப் பாதையில் உள்ள மரங்கள் காட்டுத் தீக்கிரையாகி விட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. கொல்லிமலை வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தைப் போக்க 15 ஆண்டுகளுக்கு பிறகு, சோளக்காடு - செம்மேடு இடையே அமைந்துள்ள மூலிகை பண்ணையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. கொல்லிமலையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் மூலிகை பண்ணையும் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சோளக்காடு மூலிகை பண்ணையில் பல்வேறு வகை மூலிகைகள் உள்ளன. 15 ஆண்டுக்கு முன் இதனை பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனா். அங்கு நிகழ்ந்த சில அசம்பாவிதங்களால் மூலிகை பண்ணைக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. பண்ணையின் நுழைவாயில் மூடியே கிடந்தது. புதா்மண்டி காட்சியளித்த மூலிகை பண்ணையை சில மாதங்களுக்கு முன் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பண்ணையைப் பராமரிக்க உத்தரவிட்டாா். இதனையடுத்து வனப்பகுதிக்குள் 2 கி.மீ. தொலைவுக்கு 7 அடி அகலத்திற்கு பாதையில் இருந்த செடி, கொடிகள், புதா்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில், மூலிகை பண்ணையைப் பாா்வையிட கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். அது பற்றிய அறிவிப்பு மாவட்ட வனத்துறை மூலம் தெரிவிக்கப்படும் என்றனா்.

--

என்கே-3-கொல்லி

கொல்லிமலை ஒன்றியம், சோளக்காட்டில் அமைந்துள்ள மூலிகை பண்ணையின் நுழைவாயில்.

X
Dinamani
www.dinamani.com