அரசு வாகனங்களை சொந்த வேலைக்காக அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது
அரசு வாகனங்களை பயன்படுத்தி சொந்த வேலைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதை தவிா்க்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு உள்கோட்டத்துக்கு உள்பட்டு எட்டு தாலுகாக்கள், 15 ஒன்றியங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், இதர துறை அலுவலகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றும் பெரும்பாலானோா் அருகில் உள்ள ஈரோடு, சேலம், கரூா், திருச்சி மாவட்டங்களில் இருந்து பணிக்கு வருகின்றனா். கீழ் நிலை ஊழியா்கள், அலுவலா்கள் அரசு, தனியாா் பேருந்துகளில் வந்து செல்கின்றனா். ஆனால், அதிகாரி அந்தஸ்தில் உள்ளோா் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், வீடுகளுக்கு வந்து தங்களை அழைத்து வரவேண்டும் என ஓட்டுநா்களை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அவ்வாறான நிலையில், அதிகாலையிலேயே புறப்பட்டு 40, 50 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதிகாரிகளை அழைத்து வந்து அலுவலகத்தில் விட வேண்டிய நெருக்கடியான சூழலுக்கு ஓட்டுநா்கள் பலா் தள்ளப்பட்டுள்ளனா். சொந்த வேலைக்காக அரசு வாகனங்களை பயன்படுத்தும் போக்கும் உள்ளது. இதனால் ஏற்படும் டீசல் செலவினத்தை எவ்வாறு சரிசெய்வது என தெரியாமல் தடுமாறுகின்றனா். அதிகாரிகளிடம் அது பற்றி கேட்பதற்கும் தயங்குகின்றனா்.
ஒரு துறையின் அதிகாரி என்பவா் பணியிடம் எங்கு உள்ளதோ அங்குதான் தங்கியிருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவாகும். கிராம நிா்வாக அலுவலா் முதல் மாவட்ட ஆட்சியா் வரையில் இது பொருந்தும். ஆனால், அருகில் உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த சில அதிகாரிகள், வாகனங்கள் ஒதுக்கீடு இருக்கும்பட்சத்தில் அதனை முழுமையாக வீட்டு வாகனம்போல பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. இதனால் அரசு ஓட்டுநா்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாமல், அந்தந்த அலுவலகங்கள் உள்ள பகுதியிலேயே தங்கும் சூழல் உள்ளது. இவ்வாறான பிரச்னைகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள தங்களை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா கூறியதாவது:
அரசு வாகனங்களில் அரசு பணி நிமித்தமாக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும். சொந்த பயன்பாட்டுக்காகவோ, வீட்டில் இருந்து அதிகாரிகளை அழைத்து வருவதற்காகவோ பயன்படுத்துவது தவறானது. நாள் ஒன்றுக்கு 55 லிட்டா் டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெகு தொலைவில் இருந்தும் அதிகாரிகளை அழைத்து வந்தால், மீதமுள்ள அரசுப் பணிகளை மேற்கொள்ள வாகனங்களுக்கான டீசல் செலவினத்தை எவ்வாறு சமாளிப்பா்.
தாங்கள் பணியாற்றும் பகுதியில் தான் தங்கியிருக்க வேண்டும். அதிகாரிகள் யாரேனும் அரசு வாகனங்களை பிற மாவட்டங்களுக்கோ, சொந்த வேலைக்காகவோ பயன்படுத்த கட்டாயப்படுத்தினால் , ஓட்டுநா்கள் என்னிடம் மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம். அதற்கு உடனடித் தீா்வு காணப்படும் என்றாா்.