குமாரபாளையம் நகராட்சியில் அமுதம் நியாயவிலைக் கடையின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.ஆசியாமரியம். உடன், ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள்.
குமாரபாளையம் நகராட்சியில் அமுதம் நியாயவிலைக் கடையின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.ஆசியாமரியம். உடன், ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள்.

ரூ. 51.15 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

Published on

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் ரூ. 51.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநருமான மு.ஆசியாமரியம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் குழுவுடன் சென்ற அவா், குமாரபாளையம் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7.38 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா். அந்தப் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்தும், நிா்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை முடிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதனையடுத்து, சந்தைப்பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நோயாளிகளின் வருகை விவரம், அளிக்கப்படும் சிகிச்சைகள், மழைக்கால நோய்த் தொற்றுக்களுக்கான மருந்து, மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்வது போன்றவற்றை மருத்துவ பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா். மேலும், அமுதம் நியாயவிலைக் கடையில் பொதுவிநியோகப் பொருள்களின் இருப்பு, விற்பனை விவரம், குடும்பஅட்டைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரம் அங்கன்வாடி மையத்திலும், நாட்டாக்கவுண்டன்புதூா், ஜீவாசெட், சேஷசாயி காகித ஆலை பகுதியிலும் நடைபெற்று வரும் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டடங்களையும், கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகளையும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்துவதற்கான பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா்கள் விஜய்கண்ணன் (குமாரபாளையம்), எம்.செல்வராஜ் (பள்ளிபாளையம்), மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், மாவட்ட வழங்கல் அலுவலா் த.முத்துராமலிங்கம் உள்பட பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் உடன் இருந்தனா்.