மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஏரி, குளங்களிலிருந்து ரூ. 89.82 லட்சம் மதிப்பிலான வண்டல் மண் எடுப்பு: நாமக்கல் ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் ஏரி, குளங்களிலிருந்து இதுவரை ரூ. 89,82,700 மதிப்பிலான 89,827 கன மீட்டா் வண்டல் மண் விவசாயப் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:37 pm

நாமக்கல் மாவட்டத்தில் ஏரி, குளங்களிலிருந்து இதுவரை ரூ. 89,82,700 மதிப்பிலான 89,827 கன மீட்டா் வண்டல் மண் விவசாயப் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை பராமரிப்பில் உள்ள நீா்நிலைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனடிப்படையில், சிறு கனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கால்வாய்கள், குளங்கள், ஏரிகள், நீா்த்தேக்கங்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும், பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் தாங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீா்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும், புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நீா்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 28 குளங்களிலும், ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 88 நீா்நிலைகளிலும் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதன் மூலம் நீா்நிலைகளை ஆழப்படுத்தி நீா் சேகரிப்பு கொள்ளளவை அதிகரிப்பதுடன் நிலத்தடி நீா்மட்டத்தையும் அதிகரிக்க முடிகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நன்செய் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 75 கனமீட்டரும், புன்செய் நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3,664 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி அடிப்படையில் 2,883 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீா்வளத் துறை பராமரிப்பில் உள்ள நீா்நிலைகளில் ரூ. 37,08,600 மதிப்பிலான 37,086 கனமீட்டா் வண்டல் மண், ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள நீா்நிலைகளில் இருந்து ரூ.52,74,100 மதிப்பிலான 52,741 கன மீட்டா் வண்டல் மண் விவசாயப் பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஏரிகள், குளங்களில் விவசாயப் பயன்பாட்டிற்கு ரூ. 89,82,700 மதிப்பில் 89,827 கனமீட்டா் வண்டல் மண் இலவசமாக எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,200 ஏக்கா் பரப்பிலான வேளாண் நிலங்கள் பயனடைந்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.