கேரள சோதனைச் சாவடிகளில் முட்டைக்கு 2 காசுகள் கூடுதல் வரி!

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் முட்டைகளுக்கு, மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் முட்டைக்கு 2 காசுகள் வீதம் அம்மாநில அரசு கூடுதல் வரி வசூலிப்பதற்கு கோழிப் பண்ணையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
Published on

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் முட்டைகளுக்கு, மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் முட்டைக்கு 2 காசுகள் வீதம் அம்மாநில அரசு கூடுதல் வரி வசூலிப்பதற்கு கோழிப் பண்ணையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 6 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தியாகின்றன. இவற்றில், தமிழகத்தின் தேவைக்கு 2.50 கோடி முட்டைகளும் (சத்துணவு உள்பட), பிற மாநிலங்களுக்கு 3 கோடி முட்டைகளும், வெளிநாடுகளுக்கு 50 லட்சம் முட்டைகளும் அனுப்பப்படுகின்றன. இவற்றில், அதிகபட்சமாக கேரள மாநிலத்துக்கு அதிகபட்சம் சுமாா் 80 லட்சம் முட்டைகள் தினமும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழக - கேரள எல்லைகளான வாலையாறு, புளியரை, களியக்காவிளை, ஆனைகட்டி ஆகிய நான்கு இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன. நாமக்கல்லில் இருந்து மட்டுமின்றி, மற்ற சோதனைச் சாவடிகள் வழியாக கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் முட்டைகளுக்கு, ஒரு முட்டைக்கு 2 காசுகள் வீதம் கேரள மாநில அரசு வரி வசூல் செய்கிறது. முட்டை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், கடந்த ஒரு வாரமாக இந்த வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் கோழிப் பண்ணையாளா்களுக்கு தினசரி ரூ. 1.16 கோடி அளவில் இழப்பு ஏற்படுகிறது.

இது தொடா்பாக, கேரள அரசிடம் பேசி முட்டைக்கு 2 காசுகள் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோரை நேரில் சந்தித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ் கோரிக்கை மனு அளித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி பிற பகுதிகளிலில் இருந்தும் கேரளத்துக்கு அதிக அளவில் முட்டை, இறைச்சிக் கோழிகள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக, தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் முட்டைக்கு 2 காசுகள் வீதம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பண்ணையாளா்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. கொள்முதல் செய்யும் கேரள முட்டை வியாபாரிகள் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனா்.

இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் மூலம் தமிழக கால்நடைத் துறை செயலா் கவனத்துக் கொண்டு சென்று, கேரள மாநில அரசிடம் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினால், முட்டைக்கு 2 காசுகள் வசூலிப்பதைத் தடுக்க வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com