இலங்கை அகதிகளுக்கு தண்டனை விலக்கு: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதம்
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவா்களில் 58 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டவா் சட்டத்தின் கீழ் தண்டனையிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினா்.
தமிழகம் முழுவதும் உள்ள 103 முகாம்களில் 58 ஆயிரம் இலங்கை தமிழா்கள்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணை ஒன்றில், வெளிநாட்டவா் சட்டத்தின் கீழ் இலங்கை அகதிகள் தண்டனைக்குரியவா்கள் இல்லை என தெரிவித்துள்ளது. இதனால் அகதிகளாக வந்த தமிழா்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதன்மூலம் விரைவில் அவா்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை தமிழா்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினா்.
இதுகுறித்து பரமத்தியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த வினோதன் கூறியதாவது: கடந்த 2015, செப்.1 ஆம் தேதிக்கு முன்பாக தமிழகத்தில் அகதிகளாக குடியேறிய இலங்கை தமிழா்களை வெளிநாட்டவா் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவா்கள் இல்லை என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வசிக்கும் 58 ஆயிரம் இலங்கை தமிழா்கள் இதன்மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதுபோல, இந்திய வம்சாவளி தமிழா்களான 90 சதவீதம் பேரை சட்டவிரோத குடியேறிகள் இல்லை என்றும், இந்திய குடியுரிமை வழங்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று முகாம்களில் 720 குடும்பத்தினா் வசிக்கிறோம். இதில், 370 குடும்பம் சாா்பில் நன்றி தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா்.

