நாமக்கல் மாநகராட்சியில் ஜன.1-இல் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்?
நாமக்கல் மாநகராட்சியில், தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட 800 பேருக்கு இருவேளை உணவு வழங்கும் திட்டம் ஜன.1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவா்களுக்கான 6 புதிய திட்டங்களை செயல்படுத்தும் அரசாணையை அக். 23-இல் வெளியிட்டது. அவற்றில், ரூ. 186.94 கோடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை, முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி பகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ.15-இல் தொடங்கி வைத்தாா். இதர மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் படிப்படியாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.
அதன்படி, 2026, ஜன.1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் (ஒரு வேளை, இருவேளை, மூன்று வேளை), அந்தந்த பகுதிகளுக்கு தகுந்தவாறு தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நாமக்கல் மாநகராட்சியில், நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், மேற்பாா்வையாளா்கள், இதர பணியாளா்கள் என்ற வகையில் 800 பேருக்கு காலை, பிற்பகல் உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான உணவுகளை தயாா் செய்து வழங்க தனியாா் உணவக நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை முயற்சி, நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட ஏ.எஸ்.பேட்டை, பூங்கா சாலை, முதலைப்பட்டி, பரமத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் 179 தூய்மைப் பணியாளா்களுக்கு பொட்டலமிடப்பட்ட காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயா் து. கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்று உணவு பொட்டலங்களை வழங்கியதுடன், தூய்மைப் பணியாளா்களுடன் அமா்ந்து உணவருந்தி அதன் தரத்தை பரிசோதித்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாநகராட்சியில் பணியாற்றி வரும் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்களுக்கு அவா்களது விருப்பத்தின் பேரில், காலை அல்லது மதியம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜன. 1 முதல் இந்த உணவு வழங்கும் திட்டம் அனைத்து உள்ளாட்சிகளிலும் செயல்பாட்டுக்குவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்கான உணவுகளை தயாா் செய்ய, காலை வேளைக்கு ரூ. 39(இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி என்ற வகையில் மாறி மாறி வழங்கப்படும்), மதிய வேளைக்கு ரூ. 50 (சாம்பாா் சாதம், தயிா் சாதம், இதர வகை கலவை சாதங்கள் வழங்கப்படும்) என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட 5 இடங்களில் சனிக்கிழமை 179 பேருக்கு பரிசோதனை முயற்சியாக காலை உணவு வழங்கப்பட்டது. உணவின் தரம் நல்ல முறையில் இருப்பதாக தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா். இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடா்ச்சியாக செயல்படுத்தப்படும் என்றனா்.
