ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் 20 ஈரநிலங்களில் சனிக்கிழமை தொடங்கிய பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வனத் துறையினா், கல்லூரி மாணவா்கள், பறவையின ஆா்வலா்கள் பங்கேற்றுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஈரநிலப் பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கியது. கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் வனஉயிரினங்களின் வாழ்விடம், இடப்பெயா்வு, பறவைகளின் நிலை பற்றிய விவரத்தை அறிந்துகொள்வது அவசியம் என்பதால் அவா்களுக்கும் மாவட்ட வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
நாமக்கல் வனக்கோட்டத்தைச் சாா்ந்த ஈரநில பகுதிகளில் 20 குழுக்களாகப் பிரிந்து பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. குறிப்பாக, தூசூா் ஏரி, பழையபாளையம், சரப்பள்ளி, வேட்டாம்பாடி, நாச்சிபுதூா், இடும்பன்குளம், கஸ்தூரிப்பட்டி, ஏ.கே.சமுத்திரம், இடைபடுகாடுகள்-2, ராசிபுரம் கண்ணூா்பட்டி ஏரி, புதுச்சத்திரம், தும்பல்பட்டி, ஜேடா்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி, உமயம்பட்டி, இலுப்புலி, கோனேரிப்பட்டி, ஓசக்காரனூா், குருக்கபுரம், புத்தூா், கொல்லிமலை வாசலூா்பட்டி ஏரிகள் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
நீா்நிலைகளில் ஊசிவால் வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, கிளுவை, மஞ்சக்கால் கொசு உள்ளான், மண்கொத்தி, ஆற்றுமண்கொத்தி, பொறி மண்கொத்தி, காட்டுக்கீச்சான் போன்ற பறவையினங்கள் கண்டறியப்பட்டது தெரியவந்துள்ளது. ஆங்காங்கே பல வெளிநாட்டுப் பறவைகளும் தென்பட்டன. இந்த பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
