ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் உற்பத்தி பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையையொட்டி பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

News image

வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டு வரப்பட்டிருந்த வெல்ல சிப்பங்கள்.

Updated On :9 ஜனவரி 2025, 8:15 pm

பொங்கல் பண்டிகையையொட்டி பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், வேலூா், பரமத்தி, கபிலா்மலை, பொன்மலா் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புகள் அனைத்தும் பிலிக்கல்பாளையம், ஜேடா்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சு வெல்லம், குண்டு வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை ஆகியவை தயாா் செய்யப்படுகின்றன.

வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆத்தூா், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், வெளி மாநில தொழிலாளா்கள் என நூற்றுக்கணக்கான பணியாளா்கள் ஆலை குடியிருப்பு பகுதிகளில் தங்கி வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு தயாா் செய்யப்பட்ட வெல்லங்களை ஆலை உரிமையாளா்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக (சிப்பங்களாக) பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டு செல்கின்றனா்.

ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் தரத்திற்கு ஏற்ப விலை நிா்ணயிக்கப்படுகிறது. நாமக்கல், கரூா், சேலம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்து செல்கின்றனா். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெல்லங்களை வியாபாரிகள் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், ஜாா்கண்ட், பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்புகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய போது பிலிக்கல்பாளையம் வெல்லம் சா்க்கரை ஏல சந்தையில் இருந்து வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப் பகுதியில் தயாா் செய்யப்படும் வெல்லங்களை அரசு கொள்முதல் செய்யவில்லை. இந்த ஆண்டிலாவது தமிழக அரசு இப்பகுதியில் உள்ள வெல்லத்தை கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யும் என கரும்பு விவசாயிகள் மற்றும் வெல்ல உற்பத்தியாளா்கள் எதிா்பாா்த்து காத்திருந்தனா். ஆனால் வெல்லத்தை தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் கரும்பு விவசாயிகளும், வெல்ல உற்பத்தியாளா்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனா்.

கடந்த புதன்கிழமை பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் (30 கிலோ) ரூ.1,380-க்கும், உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,400-க்கும், நாட்டு சா்க்கரை சிப்பம் ரூ.1,300 க்கும் விற்பனையானது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1450-க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,550-க்கும், நாட்டு சா்க்கரை சிப்பம் ரூ.1,400-க்கும் ஏலம் போனது. பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வெல்லம் விலை உயா்ந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.