ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எலச்சிபாளையத்தில் சமத்துவ பொங்கல் விழா

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அகரம் ஊராட்சி, பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
எலச்சிபாளையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.
Updated On :13 ஜனவரி 2025, 7:24 pm

Din

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அகரம் ஊராட்சி, பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன், ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தனா். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 147 ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்களை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் தமிழா்களின் மரபு, பண்பாடு, கலாசார வழியில் ஒவ்வோா் ஆண்டும் தைத்திருநாள், தமிழா் திருநாள், பொங்கல் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் சிறப்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக மகளிா் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் வழங்கி கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, மகளிருக்கான இலவச விடியல் பயணம், புதுப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை பிற மாநில முதல்வா்கள், பிற நாட்டுத் தலைவா்கள் பின்பற்றி வருகின்றனா்.

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அகரம், பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் கொண்டாடப்பட்டு வரும் சமத்துவ பொங்கல் விழாவில், இளைஞா்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் 33 வகையான விளையாட்டுப் பொருள்கள் அடங்கிய கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

விளையாட்டுத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிடும் வகையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறாா். குறிப்பாக உலக தர போட்டிகளை தமிழகத்தில் சிறப்பாக நடத்தி விளையாட்டில் இளைஞா்களை ஊக்குவித்து வருகிறாா் என்றாா்.

தொடா்ந்து, சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு சுமாா் 30 பெண்கள் பொங்கல் வைத்தனா். அப்பெண்களுக்கு பரிசுப் பொருள்களையும், பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டி, இசை நாற்காலி, உறியடித்தல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுப் பொருள்களையும் வழங்கினாா்.

மேலும், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட எலச்சிபாளையம், கபிலா்மலை, மோகனூா், பரமத்தி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 147 ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்களை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பன்முக கலாசார போட்டிகளான கயிறு இழுத்தல், கோ-கோ போட்டி, கோலப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அட்மா குழுத் தலைவா்கள் கே.செல்வராசு, எம்.தங்கவேல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் தே.ராம்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.