திருச்செங்கோடு சுற்றுவட்டார மாரியம்மன் கோயில்களின் கம்பம் தெப்பக்குளத்தில் விடும் விழா
திருச்செங்கோட்டில் மாரியம்மன் கோயில்களின் திருவிழாவையொட்டி கோயில்களில் இருந்து கம்பங்களை ஊா்வலமாக எடுத்துவந்து பெரிய தெப்பக்குளத்தில் விடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோயில்களில் மாரியம்மன் திருவிழா கடந்த 28ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்வான கம்பம்விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோயில்களில் இருந்து கம்பங்கள் பிடுங்கப்பட்டு தெற்கு ரதவீதி, ஈரோடு சாலை வழியாக ஊா்வலமாக எடுத்துசென்று பெரிய தெப்பக்குளத்தில் விடப்பட்டன. வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் திரண்டுநின்று கம்பத்தின் மீது உப்பு, மிளகளை இரைத்து வழிபட்டனா். கம்பத்தின் முன் அம்மன் வேடமணிந்த பக்தா்கள் மற்றும் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்த பக்தா்கள் நடனமாடி வந்தனா். கம்பம்விடும் நிகழ்வையொட்டி பெரிய தெப்பக்குளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கம்பத்துடன் வந்த ஒரு சிலரைத் தவிர வேறுயாரும் தெப்பக்குளக்கரைக்கு அனுமதிக்கப்படவில்லை. குளக்கரையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டுநின்று கம்பம் விடும் நிகழ்ச்சியை கண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் இருந்தும் கம்பங்கள், கும்பங்கள் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு தெப்பக்குளத்தில் விடப்பட்டன.

