அங்கன்வாடி மையத்தில் சிக்கிய 3 வயது குழந்தை 2 மணிநேரத்துக்கு பிறகு மீட்பு

பொத்தனூரில் அங்கன்வாடி மையத்தில் சிக்கிய 3 வயது குழந்தையை 2 மணிநேரத்துக்கு பிறகு தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Published on

பரமத்தி வேலூா்: பொத்தனூரில் அங்கன்வாடி மையத்தில் சிக்கிய 3 வயது குழந்தையை 2 மணிநேரத்துக்கு பிறகு தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் - நந்தினி தம்பதியின் மகன் நித்திக் (3). இவரை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெற்றோா்கள் விட்டுச் சென்றிருந்தனா். அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகள் வெளியில் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது, நித்திக் மட்டும் மையத்துக்குள் தனியாக இருந்தாா். அப்போது, அங்கன்வாடி மையக் கதவை மூடி தாழ்ப்பாள் போட்ட நித்திக், தாழ்ப்பாளை திறக்கத் தெரியாததால் உள்ளே சிக்கிக் கொண்டு அழுதாா்.

இதையறிந்த அங்கன்வாடி ஊழியா்கள் கதவை திறக்க முயற்சி செய்தனா். ஆனால் திறக்க முடியாததால், கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வந்த நிலைய அலுவலா் சரவணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், அங்கன்வாடி மையத்தின் கதவின் அருகே இருந்த ஜன்னலில் துளையிட்டு கதவை திறந்தனா்.

2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நித்திக்கை மீட்ட தீயணைப்புத் துறையினா், அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com