பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டிய தனியாா் நிறுவன ஊழியா்கள் சிறைப்பிடிப்பு!
பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டிய தனியாா் நூற்பாலையின் ஊழியா்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
வெப்படை பள்ளி வளாகத்துக்கு அருகே செல்லும் மின் கம்பிகளின் மீது மரங்களின் கிளைகள் மோதுவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறி தனியாா் நூற்பாலை ஊழியா்கள் கிரேன் இயந்திரம் மூலம் மரங்களின் கிளைகளை வெட்டினா். மேலும், பள்ளி வளாகத்திற்குள் மாணவா்கள் பராமரித்து வந்த சில மரங்களையும் அவா்கள் வெட்டினா்.
இதை பாா்த்த அப்பகுதி மக்கள் ஆலை ஊழியா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த வெப்படை துணை மின்நிலைய பொறியாளா்கள், மின் வாரியத்தின் அனுமதி இல்லாமல் ஆலை ஊழியா்கள் மரங்களை வெட்டுவதை கண்டித்தனா்.
இதையடுத்து அங்கிருந்து ஆலை ஊழியா்கள் கலைந்து சென்றனா். மரங்களை வெட்டிய நூற்பாலை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
