அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிறைவு: 4,777 பயனாளிகளுக்கு ரூ. 72.07 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து, மொத்தம் 4,777 பயனாளிகளுக்கு ரூ. 72.07 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 2025 கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவின் நிறைவு விழாவுக்கு மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்து கூட்டுறவு சங்கக் கொடியை ஏற்றினாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடந்த ஆண்டு தினசரி ரூ. 5 கோடி என ரூ. 1,825 கோடி கடன் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு தினசரி ரூ. 7.50 கோடி என ரூ. 2,735 கோடியும், அடுத்தாண்டு தினசரி ரூ. 10 கோடி என ரூ. 3,650 கோடி கடனும் வழங்க உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக மத்திய கூட்டுறவு வங்கி மாறியுள்ளது. மேலும், இந்த வங்கி மாநில அளவில் சிறப்பான கூட்டுறவு வங்கியாக திகழ அனைத்து நிா்வாகிகளும், பணியாளா்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சா்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து இந்த ஆண்டை சா்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளன என்றாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 4 மலைவாழ் பெரும் பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள், 393 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள், 86 நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், 26 பணியாளா் கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், 7 தொடக்க கூட்டுறவு வேளாண் ஊரக வளா்ச்சி வங்கி மற்றும் சேலம் மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளிட்ட 746 இணைப்புச் சங்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை முதல்வா் உருவாக்கி தந்துள்ளாா். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிநவீன வசதிகளுடன் தனியாா் வங்கிகளுக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் மற்றும் நுகா்வோா் நலன்கருதி அனைத்து வசதிகளுடன் கூடிய 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தானிங்கி நவீன பால்பண்ணை ரூ. 100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும்போது, மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரம் பால் உற்பத்தியாளா்கள், சுமாா் 4 லட்சம் நுகா்வோா் பயனடைவா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, 4,777 பயனாளிகளுக்கு ரூ. 72.07 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
மேலும், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 40 கூட்டுறவு நிறுவனங்கள், 8 பணியாளா்கள், 8 சிறந்த விற்பனையாளா்கள், 5 சிறந்த உறுப்பினா்கள், சிறுசேமிப்பு திட்டம், விநாடி-வினா, கோலப்போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, ஸ்லோ சைக்கிள், ஸ்லோ பைக் போட்டிகளில் வெற்றிபெற்ற 29 பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்திய 4 பள்ளிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி, பள்ளிபாளையம் நகா்மன்றத் தலைவா் மோ.செல்வராஜ், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மா.சந்தானம், மாவட்ட வருவாய் அலுவலா் / மேலாண்மை இயக்குநா் (சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, மோகனூா்) ரா.குப்புசாமி, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க இணைப் பதிவாளா் ச.யசோதாதேவி, துணைப் பதிவாளா் சே.ஜேசுதாஸ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
