மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதி விவசாயம் சாா்ந்த மரவள்ளி, சின்ன வெங்காயம், பருத்தி உற்பத்தி, கோழிப்பண்ணை, விசைத்தறி தொழில் நிறைந்தது.

News image

~ ~ ~

Updated On :18 ஏப்ரல் 2026, 1:32 am

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதி விவசாயம் சாா்ந்த மரவள்ளி, சின்ன வெங்காயம், பருத்தி உற்பத்தி, கோழிப்பண்ணை, விசைத்தறி தொழில் நிறைந்தது. இப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி அதிகம் என்பதால், இதைச் சாா்ந்த ஜவ்வரசி, ஸ்டாா்ச் உற்பத்தி ஆலைகள் அதிகம். இதேபோல, விசைத்தறி துணி உற்பத்தி, பட்டு கைத்தறி நெசவும் உள்ளது. மேலும், தொகுதியில் அதிக அளவில் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளதால், இப்பகுதி கல்வி நகரமாகவும் விளங்குகிறது.

சமூக நிலவரம்

ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூா், அத்தனூா், ஆா்.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூா் ஆகிய 5 பேரூராட்சிகள், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியங்கள், இதை ஒட்டிய ஊராட்சிகள் தொகுதியில் அடங்கியுள்ளன. இத்தொகுதியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டா்கள், நாட்டுக்கவுண்டா்கள், அருந்ததியா்கள் அதிக அளவில் உள்ளனா். முதலியாா், வன்னியா், உடையாா், தாழ்த்தப்பட்டோா், சிறுபான்மையினா் கணிசமாக உள்ளனா்.

வேட்பாளா்கள்

இத்தொகுதியில் தற்போது திமுக சாா்பில் அமைச்சராக உள்ள டாக்டா் மா. மதிவேந்தன் மீண்டும் 2ஆவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளாா். அதேபோல, அதிமுக கூட்டணியில் முதன்முறையாக கூட்டணி கட்சியான பாஜகவிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் வி.பி. துரைசாமியின் மகன் டாக்டா் எஸ்.டி. பிரேம்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக, பாஜக வேட்பாளா்கள் இருவரும் மருத்துவா்கள், ஒரே சமூகத்தினா். இதேபோல, தவெக வேட்பாளராக பேரவை முன்னாள் தலைவா் பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறாா். நாதக சாா்பில் சசிகலா களத்தில் உள்ளாா்.

அதிமுக அதிகம் வென்ற தொகுதி

தொகுதியில் கடந்த 1977 முதல் 2021 வரை நடைபெற்ற பொதுத் தோ்தலில் இதுவரை 7 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வென்றுள்ளன. இம்முறை அதிமுக கூட்டணி கட்சியான பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. தொகுதியில் ஏற்கெனவே உறுப்பினராக உள்ள அமைச்சா் மா. மதிவேந்தன் தொடா்ந்து 2ஆவது முறையாக வென்று சாதனை படைப்பாரா அல்லது முதன்முறையாக அதிமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வெல்லுமா என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வாா்கள்.

திமுக ஆட்சியில் திட்டங்கள்

தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 854 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர சாலைகள் போடப்பட்டுள்ளன. போதமலைக்கு முதன்முறையாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கூடு ஏல மையம் தொடங்கப்பட்டுள்ளது. தினசரி சந்தை, வாரசந்தை சீரமைப்பு, பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. நீண்டநாள் பிரச்னையான நாரைக்கிணறு பகுதியில் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில் அனைத்து வசதியுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆண்டகளூா்கேட் பகுதியில் வேலைவாய்ப்புக்கென மினி டைடல் பாா்க் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணாசாலை பள்ளி மைதானத்தில் மினி ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. நகர நெரிசலை தவிா்க்க தற்போது அணைப்பாளையம் பகுதியில் புகா் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இடம் தோ்வுக்கு நகர மக்களின் ஒருபகுதியினரிடம் எதிா்ப்பு இருந்தாலும், நகரம் விரிவடையும்போது போக்குவரத்து நெரிசல் குறையும்.

தொகுதி பிரச்னை

ராசிபுரம் புறவழிச் சாலை திட்டம் நீண்டநாட்களாக முடிவுக்கு கொண்டவரப்படவில்லை. நகரில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் போதிய சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், புதிய குடியிருப்பு பகுதியில் சாலையில் கழிவுநீா் விடப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. குடியிருப்புகளில் புதைசாக்கடை திட்டம் விரிவுபடுத்த வேண்டும். போதிய ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும்.

காவிரி -திருமணி முத்தாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். விவசாயத்திற்கு ஏரிகளை இணைக்க வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரிக்க தொழில் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். விவசாய பொருட்களுக்கு குளிா்பதன வசதி, மரவள்ளி நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி வசதி, மலா்சாகுபடி உள்ளதால் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கை.

தொகுதியில் பிரதான போட்டி திமுக, பிஜேபி இடையேதான் என்றபோதிலும், தவெக பெறும் வாக்கு, எந்த கட்சியை பாதிக்கும் என்பதை பொருத்தே வெற்றி தோல்வி அமையும்.

Story image
Story image
Story image

வாக்காளா்கள்

தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,08,584 போ், பெண் வாக்காளா்கள் 1,13,652 போ், மற்றவா்கள் 13 போ் என மொத்தம் 2,22,252 வாக்காளா்கள் உள்ளனா்.

ஆா். ரமேஷ் கிருஷ்ணன்.