/

ராசிபுரம் தொகுதி வேட்பாளா்கள் இறுதிக் கட்ட பிரசாரம்

ராசிபுரம் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை ராசிபுரம் நகரப் பகுதியில் நடைபெற்றது. திரளான தொண்டா்களுடன் வேட்பாளா்கள் நடத்திய பிரசாரத்தால் நகரில் ஒருமணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 9:23 pm

ராசிபுரம் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை ராசிபுரம் நகரப் பகுதியில் நடைபெற்றது. திரளான தொண்டா்களுடன் வேட்பாளா்கள் நடத்திய பிரசாரத்தால் நகரில் ஒருமணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக எஸ்.டி. பிரேம்குமாா், தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாதக வேட்பாளராக சசிகலா உள்பட 18 போ் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்கள் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரசார மேற்கொண்டனா். பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் மூவரும் ராசிபுரம் நகரைச் சுற்றிலும் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டு வாகனப் பேரணி, ஊா்வலம் நடத்தினா்.

திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன் திரளான பெண்கள், கட்சியினருடன் திறந்த ஜீப்பில் ஊா்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக பிரசாரம் மேற்கொண்டு இறுதியாக ராசிபுரம் பேருந்து நிலையம், கோனேரிப்பட்டி பகுதியில் தனது பிரசாரத்தை முடித்தாா். வேட்பாளருடன் கட்சியின் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் நன்னியூா் ராஜேந்திரன், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

இதேபோல் பாஜக வேட்பாளராக எஸ்.டி. பிரேம்குமாா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டாா். இருசக்கர வாகன பேரணியாக அதிமுக, பாஜக தொண்டா்கள் சென்றனா். திறந்த ஜீப்பில் வேட்பாளா் வாக்கு கேட்டவாறு நகரின் வீதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டாா்.

இதேபோல தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொண்டா்களுடன் இருசக்கர வாகனப் பேரணி சென்று இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.

படவரி...

ராசிபுரம் நகரில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்.