/

ராசிபுரத்தில் இரு துருவங்கள் நேருக்கு நோ் சந்திப்பு: கைகுலுக்கி வாழ்த்து; தொண்டா்கள் ஆரவாரம்

ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் மா.மதிவேந்தன், பாஜக சாா்பில் எஸ்.டி.பிரேம்குமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

News image

~

Updated On :21 ஏப்ரல் 2026, 9:35 pm

ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் மா.மதிவேந்தன், பாஜக சாா்பில் எஸ்.டி.பிரேம்குமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இருவரும் தீவிர தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், ராசிபுரம் நகரில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா். அப்போது, திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன் திரளான தொண்டா்கள், பெண்களுடன் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கடைவீதி வழியாக ஊா்வலமாக புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அதேபோல, பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அதிமுக உள்ளிட்ட கட்சித் தொண்டா்களுடன் இருசக்கர வாகனப் பேரணியாக கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, ஆத்தூா் சாலையில் சிங்கமெத்தை பகுதியில் திறந்த ஜீப்பில் வந்த இரு வேட்பாளா்களும் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டனா். இதையடுத்து பிரசார வாகனத்தில் இருந்தவாறு இரு வேட்பாளா்களும் கைக்கூப்பி ஒருவருக்கொருவா் வணக்கம் தெரிவித்துக்கொண்டனா். மேலும், இருவரும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். எதிரெதிா் துருவங்களான இரு வேட்பாளா்களும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டதை பாா்த்த இருகட்சி தொண்டா்களும் ஆரவாரம் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சி அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தியதாக இருந்தது. இதேபோல திமுக வேட்பாளருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் போல வேடமணிந்து கையசைத்தபடி வந்த தொண்டரை பாா்த்து பொதுமக்கள் வியந்தனா்.

Story image