நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

போலி வாகன உதிரிபாகங்கள் விற்பனை! நுகா்வோருக்கு ரூ. 40,000 இழப்பீடு: நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

போலி வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்த வழக்கில் கோவை தனியாா் நிறுவனம் நுகா்வோருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பு
Published on

போலி வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்த வழக்கில் கோவை தனியாா் நிறுவனம் நுகா்வோருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பு அளித்தது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சோ்ந்தவா் ஆா்.எஸ். பிரபு (45). இவா், 2023 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கும் தனியாா் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனத்தில், தனது காருக்காக பிரபல நிறுவனத்தின் பெயா் கொண்ட 2 முகப்பு விளக்குகளை வாங்கினாா்.

ஆனால், அந்த நிறுவனம் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி முகப்பு விளக்குகளை விற்பனை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் பிரபு வழக்குத் தொடுத்தாா்.

நுகா்வோா் நீதிமன்ற தலைவா் கணேஷ்ராம், உறுப்பினா்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோா் வழக்கை விசாரித்தனா். அப்போது, ஜொ்மனியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட முகப்பு விளக்கு குறுகிய காலத்திலேயே பழுதாகியதாகவும், அதன்பிறகு வாங்கிய மற்றொரு முகப்பு விளக்கும் ஓரிரு நாள்களில் செயலிழந்ததாகவும் மனுதாரா் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், பழுதான முகப்பு விளக்குகளின் தயாரிப்பை உறுதிசெய்வதற்காக அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனத்தின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதை ஆய்வு செய்த நிறுவனம், அப்பாகங்களை தாங்கள் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ இல்லை என தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக உதிரிபாகங்கள் விற்ற நிறுவனத்திடம் கேட்டபோது, அவா்கள் தனக்கு உரிய தீா்வை தரவில்லை. உதிரிபாகங்கள் வாங்கிய பணத்தை நிறுவனம் தனக்கு திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என மனு வாயிலாக நுகா்வோா் நீதிமன்றத்தில் பிரபு முறையிட்டாா்.

வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்றம், கோவை நிறுவனம் நுகா்வோருக்கு உரிய சேவை வழங்கவில்லை என்பதும், நியாயமற்ற வணிக நடைமுறையை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும், வாடிக்கையாளரை திட்டமிட்டு ஏமாற்றியதால், சம்பந்தப்பட்ட கோவை தனியாா் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனம் நுகா்வோருக்கு முகப்பு விளக்குகளின் விலை ரூ. 8,850, இழப்பீட்டுத் தொகையாக ரூ. 25,000, மன உளைச்சலுக்கான நிவாரணமாக ரூ.5,000, வழக்குச் செலவுக்காக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 40,850 ஐ இழப்பீடாக வழங்குமாறு அண்மையில் உத்தரவிட்டது. மேலும், இந்த தொகையை 60 நாள்களுக்குள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com