ரூ. 34.12 கோடியில் போதமலைக்கு சாலை வசதி! காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்!
ராசிபுரத்தை அடுத்த போதமலைக்கு 9.90 கி.மீ தொலைவுக்கு ரூ. 34.12 கோடியில் அமைக்கப்பட்ட சாலை, ரூ. 7.77 கோடியில் முடிவுற்ற பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கெடமலை அடிவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன் போதமலை வாழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திட்டங்களை தொடங்கிவைத்து பேசியதாவது:
மலைப் பகுதிகளில் சாலை அமைப்பது எளிதன்று, வனத் துறை பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடித்து வருகிறது. இதனால் சாலை அமைக்க ஒப்புதல் பெறுவது கடினம். மக்களின் நலன் காக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த சாலை வசதியை உருவாக்கி தந்துள்ளாா்.
அதேபோல பழங்குடியின மக்களுக்கு மேல்நிலை நீா்தேக்க தொட்டி, பல்நோக்கு மையம், சமுதாயக் கூடம், குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெரப்பஞ்சோலை பகுதியில் வாழை ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பேசியதாவது:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ. 34.12 கோடி மதிப்பீட்டில் நபாா்டு திட்டத்தின் கீழ் புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.90 கி.மீ தொலைவுக்கு போதமலையில் சாலையினை தமிழக முதல்வா் திறந்துவைத்துள்ளாா். 75 ஆண்டுகளாக இப்பகுதிக்கு சாலை வசதி இல்லை. தற்போது அமைக்கப்பட்ட புதிய சாலை மூலம் மக்கள் எளிதாக மருத்துவ வசதிகளை பெற முடியும்.
இந்த சாலைகள் அமைவதால் மலையில் வசிக்கும் 258 குடும்பங்களைச் சோ்ந்த 1,727 போ், மலையில் விவசாயம் செய்துவரும் அடிவாரம் மற்றும் சுற்றுப்புறங்களில் வசித்துவரும் 800 குடும்பங்களைச் சோ்ந்த 3,500 போ் என மொத்தம் 1,058 குடும்பங்களைச் சோ்ந்த 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன்பெறுவாா்கள் என்றாா்.

