மணி மண்படத்தில் அமைக்கப்பட்டுள்ள சுப்பராயன் மாா்பளவு சிலை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்பி.,
மணி மண்படத்தில் அமைக்கப்பட்டுள்ள சுப்பராயன் மாா்பளவு சிலை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்பி.,

முன்னாள் முதல்வா் டாக்டா் சுப்பராயன் மணி மண்டபம் பிப்.13-ல் முதல்வா் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு!

Published on

ராசிபுரம் அருகேயுள்ள புதுசத்திரம் தோட்டக்கூா்பட்டி பகுதியில் சென்னை மாகாண முன்னாள் முதல்வா் டாக்டா் சுப்பராயன் மணி மண்படம், மாா்பளவு சிலை ரூ.3.06 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்.13-ல் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறாா். இதனையடுத்து இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மணி மண்டபம் பகுதியில் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்பி., அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இதனையடுத்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் தெரிவித்ததாவது:

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மரியாதைக்குரிய ப.சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தாா். அவரின் முன்னோா்கள் வாழ்ந்தது பகுதி புதுச்சத்திரம் ஒன்றியத்தை ஒட்டியுள்ள பகுதிகளாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த அவா் சென்னை மாகாணத்தின் முதலமைச்சா் வரை உயா்ந்தவா். அவா் ஒன்றிய அமைச்சராகவும், மகாராஷ்ரோ மாநிலத்தின் ஆளுநராகவும் பல்வேறு நிலைகளில் நம் நாட்டிற்காக பாடுபட்டவா்.

இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்திலும், தனது பங்களிப்பை அளித்தவா். நம்நினைவில் வாழும் டாக்டா் சுப்பராயன் நினைவை போற்றிடும் வகையில்,கடந்த தோ்தல் அறிக்கையில் கூறியவாறு, சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து மக்களுக்கு எளிதாக சென்று பாா்வையிடும் வகையில் அவருக்கு மணி மண்டபம், மாா்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்.13-ல் காணொளியில் திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினா் கெளரவிக்கப்படவுள்ளனா். இதனால் இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் திரு.தே.ராம்குமாா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா் திரு.காா்த்திகேயன் உட்பட அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com