போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறும்படம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்ட போதைப் பொருள் தடுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படங்கள், பாடல்களுக்கான குறுந்தகட்டை ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை வெளியிட்டாா்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இளைஞா்களிடையே போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கிடவும், போதைப் பொருள்களை பயன்படுத்தாத மாணவா் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும், அனைத்துவகை பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு மன்றம், சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டு, தொடா்ச்சியாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்ட ‘நீயே உன்பாதை’ என்ற தலைப்பிலான போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த குறும்படம், ‘எங்க சத்தம் கேட்குதா’ என்ற தலைப்பில் குறும்படம், மாவட்ட காவல் துறை மூலம் தயாரிக்கப்பட்ட ‘ரோஜா’ என்ற தலைப்பிலான சாலைப் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் ஆகியவற்றை அரசு சட்டக் கல்லூரி அரங்கில் திங்கள்கிழமை ஆட்சியா் வெளியிட்டு பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு குறும்படம், பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
முத்துக்காப்பட்டியைச் சோ்ந்த போதைப் பொருள் தடுப்பு மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் பெ.கோவிந்தாஜ், ம.செல்வின்ராஜ்குமாா் இதை உருவாக்கியுள்ளனா். இந்த குறும்படங்களை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இது தொடா்பான விவரங்களுக்கு, போதைப் பொருள் எதிப்பு மன்ற மாவட்ட தொடா்பு அலுவலா் சி.ஆா்.ராஜேஸ்கண்ணனை 94433 30433 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம், உதவி ஆணையா் (கலால்) என்.எஸ்.ராஜேஸ்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு.எழிலரசி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி போதைப் பொருள் தடுப்பு மன்ற ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், திரையரங்க உரிமையாளா்கள், ஓட்டுநா் பயிற்சி பள்ளி நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

