கடும் நிதிநெருக்கடியில் திருச்செங்கோடு காந்தி ஆசிரம தொழில்கூடம்: மத்திய, மாநில அரசுகளின் உதவியை எதிா்நோக்கும் ஆசிரம நிா்வாகம்
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் உற்பத்தியாகும் பொருள்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்யாத நிலையில், ஜிஎஸ்டி பிரச்னை, நிதி நெருக்கடியால் ஆசிரம தொழிற்கூடம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சபா்மதி ஆசிரமம், மகாத்மா காந்தியால் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதுப்பாளையத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமம் ராஜாஜியால் தொடங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தை 1925 பிப்ரவரி 6 இல் தொடங்கிவைத்தவா் பெரியாா் ஈவெரா.
ஜமீன்தாா் பி.கே. ரத்தினசபாபதி, தன்னுடைய தோட்டத்தை ஆசிரமத்திற்காக வழங்கினாா். தன்னுடைய மகன், மகளுடன் பல ஆண்டுகளாக ராஜாஜி இந்த ஆசிரமத்தில் உள்ள ஒரு குடிசையில் வாழ்ந்தாா். இந்த ஆசிரமத்திற்கு காந்தி மட்டுமின்றி, ஜவாஹா்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் போன்ற பல்வேறு தலைவா்களும் வந்து சென்றுள்ளனா்.
ஏழை மக்களின் பசிப்போக்க, காந்தி ஆசிரமம் ஒரு தொழில் மையமாகவும் விளங்குகிறது. இங்கு, கதா் துணிகள் தயாரித்தல், ஊதுபத்தி செய்தல், இலவம் பஞ்சு மெத்தை, தலையணை தயாரித்தல், சோப்பு தயாரித்தல், இரும்பு மேஜைகள், கட்டில்கள், பீரோக்கள் தயாரித்தல், வேப்பம் புண்ணாக்கு, பட்டுப்புடவை தயாரித்தல் போன்ற தொழில்கள் நடைபெற்று வந்ததால், ஊரகப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெற்றனா்.
தரமான பொருள்களை வாங்குவதற்காக, திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை நாடி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவோா் உண்டு. அவ்வாறு சிறப்புடன் செயல்பட்டு வந்த காந்தி ஆசிரம தொழில்கூடம் தற்போது நலிவடைந்துள்ளது.
குடியரசுத் தலைவராக ஆா். வெங்கட்ராமன் பதவி வகித்தபோது, அவருடைய உத்தரவின்பேரில், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து முக்கிய பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன. அதன்பிறகு படிப்படியாக கொள்முதலை மத்திய அரசு நிறுத்திவிட்டது.
இதனால், தமிழகத்திற்குள்ளாக மட்டுமே உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆசிரமம் தள்ளப்பட்டுள்ளது. தற்போது மூலப்பொருள்கள் வாங்குவதற்குக்கூட பொருளாதார நிலை இடம்கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
வேட்டி, சேலை பயன்பாடு மக்களிடையே வெகுவாக குறைந்துவிட்டது. கதா் ஆடை அணிந்தோரில் பலா் காலமாகிவிட்ட நிலையில், அடுத்து வந்த தலைமுறையினா் கதா் போன்று உள்ள நவீன ரகங்களை விரும்புகின்றனா். மத்திய அரசு அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டி விதித்துள்ளதால், ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருள்களும் அதிலிருந்து தப்பவில்லை. ஜிஎஸ்டி இல்லையென்றால் ஓரளவு விற்பனையாவது நடைபெறும். அதற்கும் வாய்ப்பில்லாத சூழல் உள்ளது.
இந்த நிலையில், வங்கிகளிடம் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழகத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தின் 13 அங்காடிகளிலும் விற்பனை குறைந்துள்ளது. நெருக்கடியான சூழலில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தத்தளித்து வருவதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆசிரமத்தின் தலைவா் க. சிதம்பரம் கூறியது: தென்னிந்தியாவின் சுதந்திர அடையாள சின்னங்களில் ஒன்றாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் கருதப்படுகிறது. போதிய உற்பத்தி, விற்பனை இல்லாததால் ஆசிரமம் தற்போது நலிவடைந்துள்ளது. ரூ. 10 கோடி இருந்தால் மட்டுமே மீண்டும் பழைய நிலைக்கு ஆசிரமத்தை கொண்டுவர முடியும்.
குடியரசு தலைவராக ஆா். வெங்கட்ராமன் இருந்தபோது, ராணுவத்திற்கு தேவையான பொருள்களை இங்கிருந்து கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தாா். அதன்பிறகு மத்திய அரசோ, மாநில அரசோ காந்தி ஆசிரமத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. வட்டி மட்டுமே மாதம் சுமாா் ரூ. 5 லட்சம் வரை செலுத்தவேண்டி உள்ளது.
நிதி நெருக்கடிக்கு உள்ளாகியபோதும், எங்களால் முடிந்தவற்றை செய்து ஆசிரமத்தை பாதுகாத்து வருகிறோம். இங்கு உற்பத்தியாகும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தியிருப்பது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரமத்திற்கு மத்திய அரசு உதவிசெய்வதுபோல, திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளித்து ஆசிரமத்தை மீட்டெடுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். மாறுபட்ட காலச்சூழலில், இயற்கையை தவிா்த்து, செயற்கையை மக்கள் விரும்பும் நிலையில், தனியாா் நிறுவனங்களுடன் எங்களால் போட்டியிட முடியவில்லை. உற்பத்தி, விற்பனை பாதிப்பு மட்டுமின்றி, பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியமும், ஓய்வுபெற்ற ஆசிரம ஊழியா்களுக்கு பணப் பயன்களையும் வழங்க முடியவில்லை.
அடுத்த தலைமுறையும் காந்தி ஆசிரமத்தை நினைவில்கொள்ள வேண்டும் எனில், இங்கு தயாா் செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தொழிலாளா்களின் நிலை கருதி, நிதி உதவி அளிக்க வேண்டும் என்றாா்.

