முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா முன்பதிவுக்கு ஜன. 21 கடைசி நாள்: ஆட்சியா்
முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய ஜன.21 -ஆம் தேதி கடைசி நாள் என்று ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜன. 22 முதல் பிப். 8 வரையில் தமிழகம் முழுவதும் ஒன்றியம், , மாவட்டம் மற்றும் மாநில அளவில் முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா- ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளை நடத்த தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
ஊராட்சி ஒன்றிய அளவில் தனி நபா் மற்றும் குழுப் போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ. 3,000, இரண்டாமிடம் பெறுவோருக்கு தலா ரூ. 2,000, மூன்றாமிடம் பெறுவோருக்கு தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில் தனி நபா் மற்றும் குழுப் போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ. 6,000, இரண்டாமிடம் பெறுவோருக்கு தலா ரூ.4,000, மூன்றாமிடம் பெறுவோருக்கு தலா ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படும். மாநில அளவில், அணி பிரிவில் முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ. 75,000, இரண்டாமிடம் பெறுவோருக்கு தலா ரூ. 50,000, மூன்றாமிடம் பெறுவோருக்கு தலா ரூ. 25,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 15 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கலாம். முதலிடம் பெறும் வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவா். 100 மீட்டா் மற்றும் குண்டு எறிதல், கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல், , கிரிக்கெட் ஆகிய போட்டிகளும், மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் உடல்சாா்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம், பாா்வைச் சாா்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டி, அறிவுசாா்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம், அதேபோல செவிசாா்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும் என 4 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் ஜன. 21 ஆகும்.
இந்த முன்பதிவை விளையாட்டு வீரா்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ அல்லது கிராம ஊராட்சி வாயிலாகவோ மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு ஆணைய அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 95140-00777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
