மூதாட்டியை கட்டிப்போட்டு ஏழரை பவுன் நகை, பணம் திருட்டு!
பரமத்தி வேலூா் அருகே மூதாட்டியைக் கட்டுப்போட்டு ஏழரை பவுன் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், அண்ணா நகா் அருகே உள்ள நெட்டையாம்பாளையம், பொத்திக்காடு பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி ராசம்மாள் (73). இவா்களது பெரிய மகள் செல்வி கள்ளிபாளையத்திலும், இளைய மகள் பூங்கொடி குமாரசாமிபாளையத்திலும் வசித்து வருகின்றனா்.
சுப்பிரமணி தனது மகள் பூங்கொடி வீட்டிற்கு சென்றிருந்தாா். ராசம்மாள் மட்டும் தனது மகள் செல்வி வீட்டிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுவிட்டு வியாழக்கிழமை நெட்டையாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தாா். இரவு சாப்பிட்டு விட்டு ராசம்மாள் வீட்டிற்கு வெளியே வந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த சிலா் அவரை வீட்டிற்குள் தள்ளிசென்று முகத்தை மூடியும், சேலையை வாயில் வைத்து அடைத்தும் கை, கால்களை கட்டுப்போட்டுள்ளனா். இதனால் ராசம்மாள் மயக்கமடைந்தாா். பின்னா் மா்ம நபா்கள் வீட்டின் அரிசி பாத்திரத்தில் வைத்திருந்த ஏழரை பவுன் தங்க செயின், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
மயக்கம் தெளிந்து எழுந்த ராசம்மாள், வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு காலில் கட்டியிருந்த கயிற்றையும் அவிழ்த்துவிட்டு, வீட்டிற்கு வெளியே வந்து சப்தம் போட்டுள்ளாா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் உதவிக்கு வந்தனா்.
திருட்டு சம்பவம் குறித்து ராசம்மாள் மகளுக்கும் வேலூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். அங்குவந்த வேலூா் போலீஸாா் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து தடயவியல் பதிவுகளைக் கொம்டு விசாரித்து வருகின்றனா். மேலும், காயமடைந்த ராசம்மாள் வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
