

கோழிகளுக்கு சாதகமான காலநிலை காணப்படுவதால் தீவன எடுப்பு அதிகரித்து, முட்டை எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் 87.8 டிகிரி மற்றும் 68 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும்.
மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 82.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது.சிறப்பு ஆலோசனை: நாட்டுக் கோழிகளின் தீவிர வளா்ப்பில், எரிசக்தி அதிகம் கொண்ட தீவனமும், ரத்தக் கழிச்சல் நோய்க்கான மருந்தையும் தவறாமல் சோ்த்துவர வேண்டும். தொடா் பனி மற்றும் குறைந்த வெப்ப அளவுகளைக் கொண்ட காலநிலை நிலவி வருவதால், கோழிகளுக்கு சாதகமான சூழ்நிலையே உள்ளது.
இதனால், கோழிகள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக தீவனம் உட்கொள்ளும். முட்டை உற்பத்தி உள்பட அனைத்து காரணிகளும் இயல்பாகவே இருக்கும். எனினும், அதிக தீவனம் உட்கொள்வதால் முட்டை எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தீவனத்தின் அளவை உயா்த்தி (அதாவது 2,600 கிலோ கலோரிகள் வரை) கோழிகளுக்கு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.