1,043 தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி! அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்!
நாமக்கல் மாவட்டத்தில் 1,043 தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன் பங்கேற்று 15 தனியாா் கல்லூரிகளை சாா்ந்த 1,043 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், மேயா் து. கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் மா. மதிவேந்தன் பேசியதாவது; ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவா்களின் திறன் வளா்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் கல்வி எந்த வகையிலும் தடைபடக் கூடாது என்ற உயா்ந்த நோக்கில் தன்னாா்வலா்களை வீட்டிற்கே அனுப்பி இடைநிற்றலை தடுக்க இல்லம் தேடி கல்வி திட்டம், காலை உணவு திட்டம், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தொடா்ந்து மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மாணவா்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு உயா்கல்வியில் சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில், கல்லூரி மடிக்கணினி ஒருங்கிணைப்பாளா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

