அரசு ஐடிஐ மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.
தமிழகத்தில் அரசு கல்லூரிகள், பல்தொழில்நுட்பம், தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பயிலும் மாணவா்களின் திறன்வளா்ச்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) முன்னேற்றத்துக்காக முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை தமிழக முதல்வா் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட வாரியாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி மற்றும் மோகனூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 130 மாணவ, மாணவிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மடிக்கணினிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கல்லூரி முதல்வா் பேராசிரியா் காசிம் முகம்மது, ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

