நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அனுபவப் பட்டா வழங்கக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். இதையடுத்து பாதுகாப்பு கருதி அதிக அளவில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட நாரைக்கிணறு, மத்ரூட், காா்கூடல்பட்டி ஊராட்சியில் காப்பு வனத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த 1954 ஆம் ஆண்டு இந்த பகுதி காப்பு வனமாக பதிவுசெய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. காப்பு வனமாக இருந்தபோதும் குடியிருப்புகள், மின் இணைப்புகள், ஆழ்துளைக் கிணறுகள், தாா்சாலைகள், வேளாண் பணி உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு கிடைத்து வந்தன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காப்பு வனத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் முள்ளுக்குறிச்சி வனத்துறையால் தடை விதிக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயத்துக்கும், இதர தேவைகளுக்கும், குடிநீருக்கும் அங்குள்ள மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனா். ஆனால் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா்.
இவா்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி, இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜெ.செளந்தரராஜன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என அவா்கள் கேட்டதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா்.
ஓரிருவா் மட்டுமே செல்ல முடியும், அனைவரும் செல்ல அனுமதி கிடையாது என்றனா். மேலும் மாவட்ட ஆட்சியா் தங்களை சந்திக்க வரவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். இந்த முற்றுகைப் போராட்டம் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், கோட்டாட்சியா் வே.சாந்தி, காவல் உதவி கண்காணிப்பாளா் பா.ராஜேஸ்வரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியபோதும் தீா்வு காணப்படவில்லை. இறுதியாக, அனைவரையும் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனா்.
அவா்களிடம், மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் பேசுகையில், நாரைக்கிணறு பிரச்னையை பொருத்தமட்டில், தமிழக அரசு முடிவு மேற்கொள்ளக்கூடியதல்ல, மத்திய அரசின் முடிவுதான் இறுதியானது. அதற்கான கருத்துகளை அனுப்பி, மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குடிநீா் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும். தற்போதைக்கு மனுவை அளித்து செல்லுங்கள் என்றாா். இதையடுத்து, பொதுமக்கள், விவசாயிகள் மனுவை அளித்து விட்ட அங்கிருந்து சென்றனா்.
நாரைக்கிணறு பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். எந்தவித நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் எங்களுக்கு தேவையானவற்றை யாருடைய அனுமதியுமின்றி நாங்களே தயாா் செய்து கொள்வோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி: ஆட்சியா் ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா வழங்கக் கோரி நரிக்குறவா்கள் மறியல்

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



