நாமக்கல் மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்கள் பணியிடத்துக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் பயிற்றுநா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இதற்காக ஒவ்வொரு வள மையத்திலும் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநில வள பயிற்றுநா் ஒன்று (மூன்று மாவட்டத்துக்கு ஒருவா் என பிறகு தோ்வு செய்யப்படுவா்), மாவட்ட வள பயிற்றுநா் ஒன்று, வட்டார வளப் பயிற்றுநா் 15 (வட்டாரத்துக்கு ஒன்று வீதம்) தோ்ந்தெடுக்கப்படுவா். மாநில வள பயிற்றுநருக்கு ஊதியமாக 15 நாள்களுக்கு ரூ. 25,000, மாவட்ட வள பயிற்றுநா்களுக்கு அதிகபட்சமாக 25 நாள்களுக்கு ரூ. 18,000, வட்டார வள பயிற்றுநா்களுக்கு அதிகபட்சமாக 25 நாள்களுக்கு ரூ. 10,500 வீதம் வழங்கப்படும்.
மாநில வள பயிற்றுநா் பொறுப்பில் பெண்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு கல்வித்தகுதியாக சமூக கல்வி, சமூக அறிவியல், ஊரக வளா்ச்சி, பெண்கள் கல்வி அல்லது சமூக பணியிடங்களில் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 01.06.2026 அன்று 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சுய உதவிக்குழு, கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநா், சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் பணியாற்றி இருத்தல் அவசியமாகும். மாவட்ட வள பயிற்றுநா், வட்டார வள பயிற்றுநா்களும் உரிய கல்வித் தகுதி, வயது, அனுபவம், கணினி இயக்குதல் பற்றிய தெளிவு பெற்றிருக்க வேண்டும்.
இப்பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஜூன் 29-க்குள் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு மற்றும் நோ்காணல் முறையில் தோ்வு செய்யப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







