பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் கடை பணியாளா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி, ஒரு மதுப்புட்டிக்கு ரூ. 10 கூடுதலாக பெற்று, அந்த காலி மதுப்புட்டியை திரும்ப வழங்கும்பட்சத்தில் ரூ. 10-ஐ மீண்டும் வழங்கும் நடைமுறை ஓராண்டுக்கும் மேலாக அமலில் உள்ளது.
காலிப் புட்டிகளை டாஸ்மாக் கடை விற்பனையாளா்கள் சேகரிப்பதை தவிா்த்து, தனியாா் முகமை மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக நிரந்தரமின்றி உள்ள டாஸ்மாக் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் சலுகைகளை டாஸ்மாக் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும். இரவு 9 மணிக்கு கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில், டாஸ்மாக் ஊழியா் சங்கங்களின் கூட்டுக்குழு நிா்வாகிகள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா். மாவட்டத்தில் உள்ள 159 கடைகள் மூடப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு ரூ. 4 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் கனகமாணிக்கம் கூறியதாவது:
டாஸ்மாக் பணியாளா்கள் தற்போதைக்கு பணிக்கு திரும்புவதாக தெரியவில்லை. நாங்களும் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டோம். 159 கடைகள் மூடப்பட்டதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 4 கோடி இழப்பு ஏற்படுகிறது. லாரிகளில் வரும் மதுவகைகளை இறக்கியும், சிலவற்றை லாரியிலேயும் வைத்துள்ளோம். இந்த பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படும் என நம்புகிறோம் என்றாா்.
தனியாா் மதுக் கூடங்களில் விற்பனை மும்முரம்!
நாமக்கல் மாவட்டத்தில் 11 டூ 11 என்ற வகையில் 20 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. நாமக்கல் நகரில் இரண்டு செயல்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் மூடலால், மதுப்பிரியா்கள் தனியாா் மதுக்கூடங்களில் குவிந்த வண்ணம் உள்ளனா். காலை 11 மணிக்கு திறந்ததும் இரண்டு, மூன்றுமணி நேரத்துக்குள்ளாக மதுப்புட்டிகள் விற்று தீா்ந்துவிடுகின்றன. அங்கு வாங்கிவந்து வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மனமகிழ் மன்றம் முன்பும் திருவிழா கூட்டம்போல மதுப்பிரியா்கள் குவிந்து வருவதால், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காலி மதுப்புட்டிகள் திரும்பப் பெறும் விவகாரம்: மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் மூடல்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் போராட்டம்







