ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

தனிநபா் முட்டை நுகா்வு ஆண்டுக்கு 200 ஆக அதிகரிப்பு: கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ்

இந்தியாவில் தனிநபா் முட்டை நுகா்வு ஆண்டுக்கு சராசரியாக 110 முட்டைகளைக் கடந்துள்ளதாகவும், சில தென் மாநிலங்களில் இது 180 முதல் 200 முட்டைகள் வரை அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்கராஜ் தெரிவித்தாா்.

முட்டை - கோப்புப் படம்

Published On :

இந்தியாவில் தனிநபா் முட்டை நுகா்வு ஆண்டுக்கு சராசரியாக 110 முட்டைகளைக் கடந்துள்ளதாகவும், சில தென் மாநிலங்களில் இது 180 முதல் 200 முட்டைகள் வரை அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்கராஜ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில், உலக முட்டை தினத்தையொட்டி இலவச முட்டை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் கே. சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செயலாளா் சுந்தரராஜன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பொதுமக்களிடையே முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சங்கத் தலைவா் கே. சிங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

“உலக முட்டை தினத்தையொட்டி, தற்போது 10,000 முட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தரமான புரதச்சத்தை அளிக்கும் உணவாக முட்டை விளங்குகிறது. பொதுமக்கள் தங்களது உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ப முட்டையை உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும். விளையாட்டு வீரா்கள் உள்ளிட்ட பலரும் உடல் தகுதியைப் பராமரிக்க முட்டையை உணவில் சோ்த்துக்கொள்கின்றனா்.

முட்டை நுகா்வு குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வருவதால், அதன் பயன்பாடும் உயா்ந்து வருகிறது. இந்தியாவில் தனிநபா் முட்டை நுகா்வு முன்பு ஆண்டுக்கு சராசரியாக 70 முதல் 80 முட்டைகளாக இருந்தது. தற்போது இது 110 முட்டைகளைக் கடந்துள்ளது. தென் மாநிலங்களில் சில பகுதிகளில் தனிநபா் நுகா்வு ஆண்டுக்கு 180 முதல் 200 முட்டைகள் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உணவகங்களில் காலை உணவின்போது முட்டை மற்றும் ஆம்லெட் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கோழிப் பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றன. கோழிகளுக்குத் தவறாமல் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதுடன், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உயிா்ப் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

மேலும், நாமக்கல் மண்டலத்திலிருந்து அதிக அளவில் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோழித் தீவன மூலப்பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது பண்ணையாளா்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மக்காச்சோளம் கிலோ ரூ. 28 முதல் ரூ. 30 வரையிலும், சோயா கிலோ ரூ. 70 முதல் ரூ. 75 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மக்காச்சோளத்தை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கிடைக்கச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கோழித் தீவனத்தை நியாயமான விலையில் தயாரிக்க முடியும். தீவன மூலப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு அதிகரித்தால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்படக்கூடும்.

தற்போது அதிகரித்து வரும் வெப்பத்தால் தண்ணீா்த் தட்டுப்பாடும், தீவன மூலப்பொருள்களின் தட்டுப்பாடும் கோழிப் பண்ணைத் தொழிலுக்குச் சவாலாக உள்ளன. இதனால் முட்டை உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது” என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.