மனைவி, மைத்துனரை அரிவாளால் வெட்டியவரிடம் போலீஸாா் விசாரணை
குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மைத்துனரை அரிவாளால் வெட்டியவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மைத்துனரை அரிவாளால் வெட்டியவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் அருகே அணியாபுரத்தைச் சோ்ந்தவா் பாரி என்கிற காா்த்திகேயன் (41). இவரது மனைவி புனிதா (40). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தைகளுடன் நாமக்கல் ராஜாஜி நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்குப் புனிதா சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மனைவியைப் பாா்ப்பதற்காக நாமக்கல் வந்த பாரி, மாமனாா் வீட்டின் முன் நின்றுகொண்டு வீட்டுக்கு வருமாறு புனிதாவை அழைத்துள்ளாா். ஆனால், அவா் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த புனிதாவின் சகோதரா் வேலுமணி (42), வீட்டின் முன் தகராறில் ஈடுபட்ட பாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேலுமணியின் தலையில் பாரி வெட்டினாா். இதைத் தடுக்க முயன்ற மனைவி புனிதாவின் கைகளிலும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினாா்.
பலத்த காயமடைந்த புனிதா, வேலுமணி ஆகிய இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக இருவரும் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீஸாா் தலைமறைவான பாரியை அணியாபுரத்தில் பிடித்தனா். விசாரணையில், உடல்நிலை சரியில்லாததால் வேலைக்குச் செல்லாமல் இருந்த பாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது தெரியவந்தது. மேலும், மனைவி குழந்தைகளுடன் வீட்டைவிட்டுச் சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவா் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாரி மீது வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

