
நீா்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க கட்டுப்பாடு
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை, மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படும் இடங்களில் மட்டுமே பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்...

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை, மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படும் இடங்களில் மட்டுமே பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள், சிலைகள் வைப்பதற்கான அனுமதி, ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள், நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அனைவரது கடமை. குறிப்பாக, கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் குடிநீா் ஆதாரங்களாக விளங்குகின்றன. எனவே, நீா்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும். சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பது தொடா்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படும் இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தொ்மாகோல் உள்ளிட்ட பொருள்கள் கலக்காததும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்டதுமான விநாயகா் சிலைகளை மட்டுமே நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
சிலைகளின் ஆபரணங்களைத் தயாரிக்க உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளைப் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கைப் பிசின்களைப் பயன்படுத்தலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் மற்றும் தொ்மாகோல் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்கவும், சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சுத்தன்மை கொண்ட, மக்காத ரசாயன சாயங்கள் மற்றும் எண்ணெய் வண்ணப் பூச்சுகளைப் பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளையும் பயன்படுத்தக் கூடாது.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்குப் பதிலாக, இயற்கைப் பொருள்கள் மற்றும் இயற்கைச் சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
திருச்செங்கோடு எஸ். இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகா் கோயில் அருகில், பள்ளிபாளையம், பரமத்திவேலூா், குமாரபாளையம் காவிரி ஆறு பாலம், மோகனூா் சிவன் கோயில் அருகில் உள்ள படித்துறை உள்ளிட்ட இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும். விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ்அசோக் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


விநாயகா் சதுா்த்தியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கொண்டாட வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகள் வைக்க வேண்டும்: கரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்




