
மின் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ராசிபுரம் அருகே மங்களபுரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க புதிய மின் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஓராண்டு காலத்தை ஒப்பிடுகையில் தற்போது 4,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்வெட்டால் தொழில் துறைகள் பாதிக்கப்படுகின்றன. தமிழக அரசு புதிய மின் திட்டங்களை உருவாக்கி, தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை குறைத்து, புதிய மின் உற்பத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை முழுமையாகத் தீா்க்க முடியும். பல ஆண்டுகளாக தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்து அதன் மூலமாக சிலா் பயனடைந்து வந்துள்ளனா்.
ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனிக் கொள்கைகள் உள்ளன. அந்தவகையில் தற்போதைய இடைத்தோ்தலில் போட்டியிடாதது பாமகவின் நிலைப்பாடு. மக்கள் பிரச்னைகளுக்காக பாமக தொடா்ந்து குரல்கொடுக்கும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள் ரத்தப் பரிசோதனை செய்து, அதில் ரத்த அணுக்கள் குறைந்து இருப்பதாக தெரியவந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றாா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் அருகே மங்களபுரம் பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாநகராட்சிப் பகுதியில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். சேலம் மட்டுமின்றி நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை சேலத்துக்கு கொண்டுவந்து எரிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும்போது அதிலிருந்து பல்வேறு மாசுப்படுத்தும் பொருள்கள் வெளியேறும் அபாயம் உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
முதல்வா் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களின் மூலம் கையொப்பமிடப்படும் முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் இருக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







