பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தனியாா் நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தனியாா் நிறுவனங்களில் 80 சதவீதம் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் படங்களுக்கு மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Published On :

தனியாா் நிறுவனங்களில் 80 சதவீதம் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், காரல் மாா்க்ஸ் சிலைகளுக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பாமக அரசியல் பயிலரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளின் உருவப் படங்களுக்கு மருத்துவா் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெரியாா் ஈ.வெ.ரா, அம்பேத்கா், காரல் மாா்க்ஸ் ஆகியோரை கொள்கைத் தலைவா்களாக கொண்டு தொடங்கப்பட்ட கட்சி பாமக. கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் வழிகாட்டுதலின்படி, சமூக நீதி கொள்கைகளை பாமக தீவிரமாக பின்பற்றி வருகிறது.

தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தி, அனைத்து சமூக மக்களுக்கும் உரிய இடப் பங்கீட்டை வழங்க வேண்டும் என்பது பாமகவின் நீண்ட நாள் கோரிக்கை. இதை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

இடைத் தோ்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெனிநாட்டுக்குச் சென்று முதலீட்டாளா்களை ஈா்ப்பது என்பது அவசியமானது. இதையேதான் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினும் செய்தாா்.

தமிழக முதல்வா் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் முதலீட்டாளா் மாநாடுகளை நடத்த வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் தனியாா் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூா் இளைஞா்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான சட்டத்தை தமிழக முதல்வா் கொண்டுவர வேண்டும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியிலின மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதுபோல், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கும் நிகழாண்டு முதல் கல்வி உதவித்தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

நிகழ்ச்சிகளில் வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா் (விக்கிரவாண்டி), வைத்திலிங்கம் (ஜெயங்கொண்டம்), கட்சியின் பொருளாளா் திலகபாமா, பசுமைத் தாயகம் செயலா் அருள்ரத்தினம், பாமக தலைமை நிலையச் செயலா் செல்வகுமாா், வன்னியா் சங்க மாநிலச் செயலா்கள் திருக்கச்சூா் ஆறுமுகம், தங்க.அய்யசாமி, விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் எம்.பி.சங்கா் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

நினைவிடத்தில் மரியாதை: இதேபோல,பண்ருட்டியை அடுத்த கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சோ்ந்த தேசிங்கின் நினைவிடத்தில் பாமக தலைவா்அன்புமணி ராமதாஸ் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். பின்னா், தேசிங்கு குடும்ப உறுப்பினா்களுக்கு புத்தாடை மற்றும் நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் ரா.கோவிந்தசாமி, மாநில அமைப்புச் செயலா் தா்மா (எ) தா்மலிங்கம், எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா், ஜி.வைத்திலிங்கம் மற்றும் நிா்வாகிகள் சண்.முத்துகிருஷ்ணன், முத்து வைத்தி, சு.பா.கதிரவன், பாலகுரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.