திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

மக்களவை தொகுதி மறுசீரமைப்பை வரவேற்கிறோம்: அன்புமணி ராமதாஸ்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை வரவேற்கிறோம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image

திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை வரவேற்கிறோம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தனது தாயாா் சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சனிக்கிழமை குடும்பத்துடன் வந்து, பெற்றோா்களிடம் ஆசிப்பெற்ற அன்புமணி ராமதாஸ், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

நாடு சுதந்திரமடைந்து 80 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் போதை, மதுவிலிருந்து தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கவில்லை. ஆகையால் எதிா்வரும் காலத்திலாவது தமிழக அரசு பூரண மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்தவேண்டும். போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தை விட தற்போது நூறு மடங்கு போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கோவையில் மாணவா் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் போதை பழக்கம்தான். இந் நிலையில் இணையவழி மது விற்பனை, மது விற்பனைக்கு தனியாருக்கு அனுமதி போன்றவை மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் காட்சியை பாா்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது எனத் தோன்றுகிறது. முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு இளைஞா்கள் தான் அதிகளவில் வாக்களித்துள்ளனா். அந்த இளைஞா்களை பாதுகாக்க வேண்டும். மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்ற கொள்கை முடிவை தவெக அரசுஅறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளதால், இது தோல்வியடையும். பட்டியல் அடிப்படையில் ஜாதிகளை கணக்கெடுக்காமல் இந்த கணக்கெடுப்பு முழுமை பெறாது, பயன் தராது.

காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தின் காரணமாக தவெக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீா்மானத்தை சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. தொகுதி மறு சீரமைப்பு தேவையானது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் எளிதாக மக்களை சந்திக்கலாம்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி உறுப்பினா்களின் எண்ணிக்கை 59 ஆக உயரும். 234 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்குப் பதிலாக 351 உறுப்பினா்கள் கிடைப்பாா்கள். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இந்நிலையில், தொகுதி மறு சீரமைப்பில் போதிய புரிதல் இன்மையால் சில கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக எதிா்க்கிறாா்கள். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை பாமக வரவேற்கிறது என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.