வாழப்பாடி அருகே ரௌடி வெட்டிக் கொலை

வாழப்பாடி அருகே ரயில் பாதையில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த ரௌடி சடலத்தைக் கைப்பற்றி போலீஸார்
Updated on
1 min read

வாழப்பாடி அருகே ரயில் பாதையில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த ரௌடி சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம்,  வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி சி.எஸ்.ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த அசோகன்  மகன் விஜயன் (31). இவர் மீது வாழப்பாடி,  சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக விஜயனை வாழப்பாடி போலீஸார்  கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த விஜயன் தனது சொந்தக் கிராமத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில், புதன்கிழமை காலை, வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே, விருதாச்சலம் அகல ரயில் பாதையில் தலையில் வெட்டுக் காயங்களுடன் விஜயன் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் உமாசங்கர், சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில், பெண்ணுடனான தகாத உறவு விவகாரத்தில் விஜயன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என  தெரியவந்துள்ளது. சந்தேகப்படும் நபர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com