டெங்கு காய்ச்சல் பரபரப்பு குறையாத நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை சுமார் 80 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சேலம் மாவட்டமும் ஒன்றாகும். டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்த மாவட்டத்தில் அதிகம். சேலம் மாவட்டத்தில் குறிப்பாக டெங்கு மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல் காரணமாக சுமார் 73 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில், டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் 24 பேர் வரை இறந்துள்ளனர். இதர வைரஸ் காய்ச்சலால் 49 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, சேலம் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு பாதிப்பு நகரப் பகுதி மட்டுமில்லாமல், புறநகரப் பகுதிகளிலும் அதிகமாக இருந்தது. தற்போது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் டெங்கு தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், காய்ச்சலுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளைக் கண்காணித்தல், போலி மருத்துவர்களைக் கண்டறிய திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு செல்பவர்களிடம் வீரியமிக்க மருந்துகளைச் செலுத்தி சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் மேற்பட்டோர் என இதுவரை சுமார் 80 பேர் போலி மருத்துவர்களைக் கண்டறிந்து, மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியது:
இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறையின்படி குறைந்தபட்சம் எம்.பி.பி.எஸ். முடித்து பதிவு பெற்ற மருத்துவர்களிடம் மட்டுமே பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டும்.
இன்னும் சில பகுதிகளில் மருத்துவர்களிடம் உதவியாளராக இருந்து கொண்டு, கம்பவுண்டராகச் செயல்படும் நபர்களிடம் பொதுமக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும்.
மேலும் 70 சதவீதத்துக்கு மேலான பொதுமக்கள் மருத்துவம் படிக்காதவர் என்று தெரிந்தும், அவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
மனித உயிரோடு விளையாடும் இதுபோன்ற போலி மருத்துவர்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். அதேநேரத்தில், குறைந்தபட்சம் 5 முதல் 6 கிலோ மீட்டர் தொலைவுக்குள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சளி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் முறையாக மருத்துவம் படித்தவர்களிடமோ, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவர் பதிவு பெற்றவரா, மருத்துவம் படித்தவரா என தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்கள் கைதான சில நாள்களிலேயே மீண்டும் ஜாமீன் பெற்று வெளியே வந்து அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனிடையே போலி மருத்துவர் கைது என்ற பெயரில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி என பாரம்பரிய வழி மருத்துவம் படித்து மருத்துவம் பார்ப்பவர்களைக் கைது செய்து வருவதற்கு, ஆயுஷ் மருத்துவர்கள் நலச் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
போலி மருத்துவர்கள் சோதனைகளின்போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உடனிருக்க வேண்டும் என்று சட்ட விதிமுறைகள், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால் நடைமுறையில் அதிகாரிகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உள்ளோம் என ஆயுஷ் மருத்துவர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் வி.கோபாலகிருஷ்ணன் கூறியது:
டெங்கு உயிரிழப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 80 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து 100 பேர் வரை குறைந்துள்ளது. டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள விதிமுறையின்படி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, முறையான மருத்துவம் படிக்காதவர்களிடம் சென்று சிகிச்சைபெற்று, காய்ச்சல் முற்றிய நிலையில்தான் அதிகம் பேர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அந்தவகையில், முறையாக மருத்துவம் படிக்காத அதே நேரத்தில் சித்த மருத்துவத்துக்குப் பதிலாக அலோபதி மருத்துவம் பார்த்தவர்களைக் கண்டறிந்து கைது செய்து வருகிறோம். போலி மருத்துவர்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.