
சேலத்தில் வெல்லம் ஏலம் விடும் மண்டியில், கலப்பட வெல்லத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் வெல்லங்கள் அனைத்தும் சேலம், செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள கரும்பு மற்றும் வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் கிடங்குக்குக் கொண்டு வந்து அங்கு திறந்தவெளி ஏலத்துக்கு வைக்கப்படும்.
ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். கடந்த வாரம் இந்த மண்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 45 ஆயிரம் கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை (டிச.17) மண்டி திறக்கப்பட்டது. சுத்தமான வெல்லத்தை மட்டுமே ஏலத்தில் வைக்க அனுமதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறியதால் கரும்பு விவசாயிகளுக்கும், ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் இருதரப்பினரும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற நிலையில் விவசாயிகள் சங்க நிர்வாகி பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆலை உரிமையாளர்கள் கொண்ட நிர்வாக குழுவை கொண்டு வெல்லம் ஏலம் விட செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் இருதரப்பினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கரும்பு விவசாயிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் ஆவேசமடைந்த கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸை சந்தித்து தங்களது பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






