சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் விவசாயி இறந்ததாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய சென்னையைச் சேர்ந்த சினிமா உதவி கேமிராமேனை போலீஸார் கைது செய்தனர்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நில அளவீடு செய்யும் பணி சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இத் திட்டத்துக்கு நிலம் அளவீடு செய்ய விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கட்செவி அஞ்சல் மற்றும் முகநூலில், பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் விவசாயி ஒருவர் பலியானதாக வீடியோ பதிவு வெளியானது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், மல்லூர் பகுதியில் இருந்து அந்த வீடியோ பரப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தேனி மாவட்டத்தில் வனச் சரகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானை தாக்கி விவசாயி ஒருவர் இறந்த வீடியோ பதிவை தவறுதலாக சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரியவந்தது.
விசாரணையில், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பி.செல்வராஜ் (43) என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பியதும், அவர் சினிமாவில் உதவி கேமரா மேனாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) அருளரசு கூறியது:
கைது செய்யப்பட்ட செல்வராஜிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் அந்த வீடியோவை ஈரோட்டை சேர்ந்த ஒருவர் அனுப்பியதாகவும், அதை மற்றொருவருக்கு அவர் அனுப்பியதாகவும் கூறினார். இதையடுத்து, ஈரோட்டிலிருந்து வீடியோவை அனுப்பிய நபரை போலீஸார் தேடிச் சென்றுள்ளனர்.
இதேபோல, தொலைக்காட்சியில் பசுமை வழி சாலை குறித்து பொதுமக்கள் அளித்த பேட்டிகளை சமூக வலைதளங்களில் ரவுத்திரன் என்ற பெயரில் ஒரு முகம் சிவப்புக் கொடி கட்டிக் கொண்டு பதிவேற்றம் செய்து வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதால், ரவுத்திரன் என்ற பெயரில் காரிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைத் தேடி வருகிறோம். இதுபோன்று நடக்காத ஒரு நிகழ்ச்சியை நடந்தது போன்று சித்திரிக்கும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற அவதூறு மற்றும் பீதியை ஏற்படுத்தும் செய்தி உங்களது செல்லிடப்பேசிக்கு வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுகிறோம். தவறுதலாக வந்த செய்தியை வேறொருவருக்கு அனுப்பினாலும், சட்டப்படி குற்றமாகும். எனவே, பொதுமக்கள் தக்க விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







