பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவக்கம்: 121 மையங்களில் 40,645 பேர் எழுதுகின்றனர்: 80 பறக்கும் படை அமைப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வை சேலம் மாவட்டத்தில் 121 தேர்வு மையங்களில் 40,645 மாணவ, மாணவியர் வியாழக்கிழமை எழுதுகின்றனர். 
Updated on
2 min read

பிளஸ் 2 பொதுத் தேர்வை சேலம் மாவட்டத்தில் 121 தேர்வு மையங்களில் 40,645 மாணவ, மாணவியர் வியாழக்கிழமை எழுதுகின்றனர். 
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் 121 தேர்வு மையங்களில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, 19,579 மாணவர்கள், 21,066 மாணவியர் என  மொத்தம் 40,645 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 1 பொதுத் தேர்வை 18,861  மாணவர்கள், 21,448   மாணவியர் என  மொத்தம்  40,309 பேர் எழுத உள்ளனர். இதில் 93 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு விதிகளின்படி தேர்வெழுத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 148 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வை 22,767 மாணவர்கள், 22,539 மாணவியர் என மொத்தம் 45,306 பேர் தேர்வெழுத உள்ளனர்.
மேல்நிலைப் பொதுத் தேர்வுகளுக்காக  சேலம் மாவட்டத்தில் 16 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களும், இடைநிலை பொதுத் தேர்வுகளுக்காக 23 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களும் அமைக்கப்பட்டு, இரட்டைப் பூட்டு முறையில் இரு காப்பாளர்கள் வீதம் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 
வினாத்தாள் கட்டுக்காப்பு மையம்  24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.     
மேல்நிலைத் தேர்வு மையங்களுக்கு 19 வழித்தடங்களில் வினாத்தாள் கட்டுகள், ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வழங்க மாவட்டக் காவல் துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளுக்கு மாவட்டத்தில் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அத்தேர்வு மையங்களில்  121 முதன்மைக் கண்காணிப்பாளர்களும்,  121 துறை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு மையங்களில் தேர்வறைகள் கண்காணிப்புப் பணிக்காக 2,950 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கும், தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் கோட்டாட்சியர் நிலையில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பறக்கும் படை குழுக்கள்  அனைத்து தேர்வு மையங்களையும் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்வு மையங்களில் விதிகளை மீறுபவர்களின்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களில் எதிர்பாரா பார்வையிடும் பொருட்டு  முதுகலை ஆசிரியர்கள் நிலையில் 80 பணியாளர்கள் பறக்கும் படை குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பறக்கும் படைக் குழுக்கள் அனைத்துத்  தேர்வு மையங்களையும் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் அந்நியர் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தண்டனைப் பற்றிய சுவரொட்டி தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தேர்வுகள் சுமூகமாக நடத்தப்படுகின்றன. எனினும் காவல் துறையினர்  மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து தேர்வு மையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com