ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

பசுமை சாலை திட்டம் விசாரணை: விவசாயிகள் வெளிநடப்பு

பசுமை சாலை திட்டம் தொடர்பான ஆட்சேபணை மனு குறித்த விசாரணையை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:47 am IST

பசுமை சாலை திட்டம் தொடர்பான ஆட்சேபணை மனு குறித்த விசாரணையை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
சேலம்- சென்னை இடையே எட்டு வழி பசுமை சாலைக்கான நிலத்தை கையகப்படுத்த அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே 8 வழி சாலைக்கு விவசாய நிலத்தை கொடுக்க முடியாது என்று ஆட்சேபணை மனு அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இதனிடையே விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே 8 வழி சாலைக்கு கூடுதலாக நிலம் கையகப்படுத்திட உள்ளதாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மீண்டும் ஆட்சேபணை அளித்தனர். ஆட்சபனை மனு அளித்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் தனி நபர் விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தனியாக அழைப்பாணை அனுப்பப்பட்டது.
 அதன்படி சேலம் மாவட்டம், சின்னகவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த 36 பேர் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் மூலம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை திரண்ட விவசாயிகள், 8 வழி சாலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். 
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் ஒருங்கிணைந்து செல்ல அனுமதிக்க முடியாது என்று அறிவுறுத்தினர். 
மேலும் தங்களின் கோரிக்கைகளை கேட்க சம்பந்தப்பட்ட அதிகாரி வர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் வர மறுத்ததால், விவசாயிகள் விசாரணையை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம்-சென்னை 8 வழி சாலை தொடர்பாக சில தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தகவல் தெரிவிக்க முடியாது என்று அதிகாரிகள் பதிலளிக்கின்றனர். ஏற்கெனவே இந்தத் திட்டத்துக்கு நிலம் கொடுக்க முடியாது என்று பல முறை ஆட்சேபனை மனு அளித்துள்ளபோது, தொடர்ந்து இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.  விவசாயிகளின் கோரிக்கை குறித்தும், கேள்வி குறித்தும் பதில் அளிக்க அதிகாரிகள் முன் வராததால், விசாரணையை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம். பசுமை சாலை திட்டத்துக்கு ஒருபோதும் நிலம் கொடுக்க முடியாது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.