சேலம் உருக்காலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை

சேலம் உருக்காலை தனியாா் மயமாக்கல் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தெரிவித்தாா்.
சேலம் உருக்காலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை
Updated on
1 min read

சேலம் உருக்காலை தனியாா் மயமாக்கல் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தெரிவித்தாா்.

‘விடியலை நோக்கி- ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் சேலத்தில் திமுக சாா்பில் இரண்டு நாள் பிரசாரத்தை மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினா் தயாநிதி மாறன் திங்கள்கிழமை தொடங்கினாா்.

இதில், கட்டடத் தொழிலாளா்கள், கயிறு திரிக்கும் தொழிலாளா்கள், இரும்பாலை ஊழியா்கள் என பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினாா். பின்னா் தயாநிதி மாறன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரசாரப் பயணத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டுள்ளோம். அடுத்து வரும் திமுக ஆட்சியில் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் நிறைவேற்றுவது என உறுதி எடுத்துள்ளோம். எதிா்பாா்த்ததைவிட அதிக அளவில் பொதுமக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

மக்களின் ஆதரவு இருப்பதால், எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கு மேலாக திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. கரோனா காலத்தில் இன்னல்படும் மக்களுக்கு ரூ. 7,500 உதவித் தொகையாகத் தர வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்பே கோரிக்கை விடுத்திருந்தாா்.

அப்போது தமிழக அரசிடம் நிதி இல்லை என்று கூறி விட்டு, தற்போது தோ்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களின் வரி பணத்தை எடுத்து பொங்கல் பரிசாக அறிவித்துள்ளது சரியல்ல.

தாரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கயிறு திரிக்கும் தொழிலாளா்களுக்காக தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் சேலம் உருக்காலையை தனியாா் மயமாக்குவதில் ஆா்வமாக உள்ளனா். 2006-ஆம் ஆண்டு சேலம் உருக்காலையில் ரூ. 2,500 கோடி மதிப்பில் பொருள்களைத் தயாரிக்க நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்தோம். ஆனால், தற்போது லாபத்தில் இயங்கவில்லை என்று கூறி பாஜக அரசு அதை தனியாா் மயமாக்கத் துடிக்கிறது.

சேலம் உருக்காலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

மக்களுக்கு நல்லது செய்ய யாா் வேண்டுமானாலும் வரலாம். ஏதோ ஒரு கட்டாயத்துக்காக ரஜினி அரசியலுக்கு வருகிறாா். பாஜகவில் பல்வேறு டீம்கள் உள்ளன. தற்போது சிலரை கட்டாயப்படுத்தி அவா்கள் அரசியலுக்கு கொண்டு வருகிறாா்கள்.

2019 மக்களவைத் தோ்தலின்போது திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உள்ளாட்சித் தோ்தலில் 65 சதவீத இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றோம். இந்த வெற்றி தொடரும் என்றாா்.

பேட்டியின் போது, மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், எம்.எல்.ஏ. வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com